பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவன் திருமால் உருவ அமைப்பு*

சிவனும் திருமாலும் தொன்று தொட்டுத் தமிழர் வழிபட்டு வருகின்ற இரண்டு பழம்பெருந்தெய்வங்கள். தமிழருக்கு மட்டு மன்றி, இந்தியாவிலுள்ள இந்து சமயத்தவர் எல்லாராலும் இந்தத் தேவர்கள் வழிபடப்படுகின்றார்கள். மிகப் பழைய காலத்தில் இந்தத் தேவர்கள் இருவரும் வேற்றுமை இல்லாமல் ஒரே தேவராகக் கருதப்பட்டு வழிபடப்பட்டார்கள். சைவம் என்றும் வைணவம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரித்து, சிவபெருமான் சைவக் கடவுள் என்றும் திருமால் வைணவக் கடவுள் என்றும் இப்போது கருதப் படுவது போல, அக்காலத்தில் கருதப்படவில்லை. அக்காலத்தில் சிவனும் திருமாலும் ஒரே கோவிலில் வணங்கப்பட்டார்கள்.

இந்தத் தேவர்களின் உருவங்கள் இரண்டு கைகளையுடைய தெய்வங்களாக அமைக்கப்படவில்லை; நான்கு கைகள் அல்லது எட்டுக் கைகளை உடைய உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கைகள் மட்டும் உடைய சிவ, விஷ்ணு உருவங்கள் மிக மிக அருமை, ஆனால், நான்கு கைகளையுடைய உருவங்களையே பெரும்பாலும் காண்கிறோம்.

இந்துக்கள் அல்லாத வேறு மதத்தார் இந்த உருவங்களைப் பார்க்கும்போது, வியப்படைகின்றனர். இரண்டு கைகள் இல்லாமல், இயற்கைக்கு மாறாக, ஏன் நான்கு, எட்டு முதலான பலகைகளை இவ்வுருவங்கள் பெற்றுள்ளன என்று அவர்கள் மனத்தில் வினா எழுகின்றது. இந்த உருவங்கள் பல கைகளைப் பெற்றிருப்பதற்குத் தகுந்த காரணம் உண்டு. அதனை இங்கு விளக்கிக் கூறுவோம்.

மற்ற மதத்தாரைப் போலவே சைவரும் வைணவரும், ‘கடவுள் உருவம் இல்லாதவர்' என்றும், அவர் அருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஆனால், அருவமாய் இருக்கிற கடவுளுக்கு உருவம் அமைத்தபோது. அவ்வுருவத்துக்கு இரண்டு கைகளை அமைக்காமல் பல கைகளை அமைத்தார்கள். ஏன் *தமிழியற்காட்சிகள். புலவர் குழு வெளியீடு, 1968.