பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

71

கொண்டிருக்கிறார். அவருடைய மற்றொரு இடக்கை புரிசடையைச் சுட்டிக் காட்டுகிறது. நான்காவது இடக்கை உமாதேவிக்குப் பின்புறத்தில் மறைந்திருக்கிறது.

இடக்கையினால் பிடித்திருக்கிற புரிசடையின்மேல், ஆகாய கங்கை வானிலிருந்து இறங்குகிறது. கங்கையைப் பெண்ணாகக் கூறுவது கவி மரபு. அந்த மரபுப்படி இந்த உருவத்தையமைத்த சிற்பியும், கங்கையைப் பெண் வடிவமாகக் காட்டியுள்ளார். கங்கை யாகிய பெண் கைகளைக் கூப்பித் தொழுது கொண்டே, மேலிருந்து சடைப்புரியில் இறங்குகிறாள். அவளுடைய அரைக்குக் கீழ்ப்பகுதி வெள்ளம்போல அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமான் கங்கை நீரைச் சடையில்கொண்டது ஒரு நொடி நேரத்திலாகும். மிக வேகமாக ஆற்றலோடு பாய்ந்து, உலகத்தை அழித்துவிட இருந்த வெள்ளத்தைச் சிவபெருமான் ஒரு சிறு சடைப்புரியில் ஒரு துளிநீராக அடக்கிக் கொண்டார். ஆகையால், நிலத்தை அழித்துவிடக் கருதிய கங்கையின் எண்ணம் நிறைவேறவில்லை. பூ விழுவதுபோலக் கங்கை நீர் அவருடைய சடையில் வீழ்ந்து மெல்லத் தங்கிவிட்டது. இந்தச் செயல் ஒரு நொடியில் முடிந்துவிட்டது.

6

இனி, சடையை முன்னிருந்ததுபோலக் கட்டி முடிக்க வேண்டியதுதான். இங்குத்தான் சிற்பக் கலைஞனின் கூர்மையான அறிவும் கைத்திறனும் நன்றாக விளங்குகின்றன. சடையை முடித்துக் கட்டி அதில் புனையவேண்டிய பொருள் களையெல்லாம் சிவபெரு மானுடைய வலக் கைகளில் சிற்பக் கலைஞன் காட்டியிருக்கிறான். சடைமுடியில் அணியவேண்டிய நிலாப்பிறையைச் சிவபெருமான் வலக் கையில் ஏற்றிருக்கிறார். தலையைச் சுற்றி அணியவேண்டிய இண்டை மாலை இன்னொரு கையில் இருக்கிறது. இண்டை மாலைக்குக் கீழே, மற்றொரு கையிலே நாகப்பாம்பு காணப்படுகிறது. சிவபெருமான் தம்முடைய சடை முடியைச் சுட்டியிருப்பது வழக்கம். கங்கையை ஏற்றுக் கொள்ளச் சடையை அவிழ்த்தபோது சிவபெருமான் அந்தப் பாம்பை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டார். அந்தப் பாம்பு மூன்று தலைகளையுடையது. இது படம் எடுத்துச் சீறும் நிலையில் உள்ளதைக் காணலாம். நான்காவது வலக்கை மார்பின் பக்கமாக எதையோ விரல்களால் பிடித்திருப்பதுபோலக் காணப்படுகிறது. பிடித்திருக்கும் பொருள் இன்னதென்பதைச் சிற்பக்