பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கவலையின்மையினாலும் பெரிதும் அழிந்துவிட்ட போதிலும், இப்போதும் குற்றுயிராகக் காணப்படுகின்றன. இப்போது இவ்வோவியங்கள் ஒளிமழுங்கிக் காணப்படுகிறபடியால், இவற்றைப் பார்க்கச் சென்றவர்களில் சிலர் இவற்றைப் பாராமலே திரும்பி விட்டதும் உண்டு.

சித்தன்னவாசல் சுவர் ஓவியங்கள் இடைக்காலத்திலே பொது ஜனங்களுக்குத் தெரியாமல் மறைந்திருந்தன. 1919-இல் திரு.டி.ஏ. கோபிநாத ராயர் அவர்கள் தற்செயலாக இந்த ஓவியங்களைக் கண்டுபிடித்து அதனைப் புதுச்சேரியில் இருந்த ழூவோ தூப்ராய் அவர்களுக்குத் தெரிவித்தார். பிரெஞ்சுக்காரரான ழூவோ தூப்ராய் அவர்கள், பல்லவர் சரித்திரம், பல்லவர் கலை முதலியவற்றை ஆராய்வதில் ஊக்கமுள்ளவர். அவர் உடனே சித்தன்ன வாசலுக்குச் சென்று அங்குள்ள சுவர் ஓவியங்களைக் கண்டு அவற்றின் அருமை பெருமைகளைப்பற்றிப் பொது மக்களுக்கு அறிவித்தார். இவ்வாறு சித்தன்னவாசல் ஓவியம் வெளிப்படுத்தப்பட்டது.

சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள வியங்களில் குறிப்பிடத் தக்கவை, மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச் சித்திரங்களும், இரண்டு நடன மாதர்களின் ஓவியங்களும், காதிகா பூமி என்னும் பெயருள்ள தாமரைகள் நிறைந்த அகழியின் ஓவியமும் ஆகும்.

கயிலாசநாதர் ஓவியம்

சித்தன்ன வாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சீபுரத்துக் கயிலாசநாதர்கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாசநாதர் கோயிலுக்கு இராஜ சிம்மேசுவரம் என்பது பழைய பெயர். ஏனென்றால் இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 680-700) இக்கோயிலைக் கட்டினான். கற்றளிகளைக் கட்டும் புதிய முறையை உண்டாக்கினவன் இவ்வரசனே. மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலைக் கட்டியவனும் இவனே. இவன் காஞ்சியில் கட்டிய இக் கயிலாசநாதர் கோயிலிலே சுவர் ஓவியங்களையும் எழுதுவித்தான்.

நெடுங்காலம் மறைந்திருந்த இக்கோயில் சுவர் ஓவியங்களை ழூவோ தூப்ராய் அவர்கள் 1931-இல் கண்டுபிடித்து, அதனை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இங்குள்ள ஓவியங்கள் பெரிதும் சிதைந்து அழிந்துவிட்டன. உருப்படியான ஓவியங்கள் இங்குக்