பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியங்கள்*

ஓவியக்கலை மிகப் பழைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் வளர்ச்சியிடைந்திருந்தது. சங்க நூல்களிலே ஓவியத்தைப்பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அக் காலத்திலே ஓவியங்கள் பெரும்பாலும் சுவர்களிலே எழுதப்பட்ட சுவர் ஓவியங்கள் ஆகும். மகேந்திரவர்மன் வாழ்ந்திருந்த கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஓவியக்கலை மிகச் சிறப்படைந் திருந்தது. மகேந்திரவர்மன் தமிழ்நாட்டிலே புதிதாகக் குகைக் கோயில்களை அமைத்து அக் குகைக்கோயில்களின் சுவர்களிலே ஓவியங்களை எழுதினான். சித்திரங்கள் (ஓவியங்கள்) தக்கபடி பாதுகாக்கப்படாவிட்டால், எளிதில் அழிந்து படக்கூடியவை. ஆதலால், அக்காலத்துச் சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல் பெரிதும் அழிந்து விட்டன. மிகுந்துள்ளவை மிகச் சொற்பமே.

மகேந்திர விக்கிரமபல்லவன் ஓவியச் சுவையுடையவன். ஓவியக் கலையைச் சுவைத்தவன் மட்டுமல்லன்; ஓவியநூலைக் கற்று வியக்கலையைப் பயின்றவன். இதனை எப்படி அறிகிறோம் என்றால், இவன் சித்திரகாரப்புலி என்று சிறப்புப்பெயர் பெற்றிருந் ததனாலே அறிகிறோம்.

இவன் அமைத்த திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலிலே இவனுடைய சிறப்புப் பெயர்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பொறிக்கப்பட்ட பெயர்களிலே, பல்லவத் தமிழ் எழுத்திலே சித்திரகாரப்புலி என்னும் பெயர் காணப்படுகிறது. பல்லாவரத்துக் குகைக் கோயிலிலும் சித்ரகாரபுலி என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலே ஏகாம்பரேசுவரர் கோவில் பௌர்ணமி மண் பத்திலேயுள்ள தூண்களில் உள்ள மகேந்திரவர்மனுடைய சிறப்புப்பெயர்களில் சித்ரகாரபுலி என்னும் பெயரும் காணப்படுகிறது. *மகேந்திரவர்மன் (1955) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.