பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

133

இது அர்த்தநாரீசுவரர் உருவம் அன்று. சமணக் கோயிலிலே சிவபெருமானுடைய அர்த்தநாரீசுவரர் உருவம் எழுதப்படுவது வழக்கமன்று. அன்றியும் இது அர்த்தநாரீசுவரர் உருவமாகக் காணப்பட வில்லை. இடப்புறம் பெண்ணாகவும் வலப்புறம் ஆணாகவும் அமைந்த ஒரே உருவந்தான் அர்த்தநாரீசுவரர் உருவம் ஆகும். ஆனால், இந்த ஓவியத்தில், ஆண் உருவமும் பெண் உருவமும் தனித்தனியே வெவ்வேறாக உள்ளன. இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன. உண்மையில் இந்த ஓவியம் மகேந்திர வர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை.3

சித்தன்னவாசல் ஓவியம் : நடன மங்கை

இரண்டாவதாக உள்ளவை, இரண்டு தூண்களில் எழுதப் பட்டுள்ள இரண்டு அரம்பையரின் நடனக் காட்சி. இவை அரம்பையர் இருவர் அரங்கத்தில் நின்று நடனம் புரிவதைக் காட்டுகின்றன. மகேந்திரவர்மனையும் அவன் மனைவியையும் ஓவிய உருவமாகத் தீட்டிய அதே ஓவியப் புலவனுடைய கைவன்மையையும் கலைத் திறத்தையும் இந்த ஓவியத்திலும் காணலாம். நாடகக் கலையில் தேர்ந்த நங்கையர் இருவர், நமது கண்முன்பாக உயிருடன் நின்று நடனம் ஆடுவதுபோலக் காணப்படுகின்றனரேயல்லாமல் சுவரில் எழுதப் பட்ட சித்திரமாகத் தோன்றவில்லை.