பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

நூலாக்கலிங்கமாகிய பட்டுத் துணிகளிலே சீன ஓவியர் பழங் காலத்தில் ஓவியங்களை எழுதினார்கள்.

பலகைகளிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. ஓவியப் பலகைக்கு வட்டிகைப் பலகை என்பது பெயர். கிழிகளிலும் சித்திரங்கள் எழுதப்பட்டன. கிழியை ஆங்கிலத்தில் (Canvas) என்பர். ஓவியரின் எழுதுகோலுக்குத் துகிலிகை என்பது பெயர் (துகிலிகை - Brush).

காவியப் புலவரும் நாடக ஆசிரியர்களும் தங்கள் காவியங் களிலும் நாடகங்களிலும் நவரசங்களை (ஒன்பது சுவைகளை)த் தம்முடைய பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்துவது போலவே ஓவியக் கலைஞரும் நவரசங்களைத் தம்முடைய மனித ஓவியங்களில் புலப்படுத்தி எழுதினார்கள். சுவை அல்லது இரசம் மெய்ப்பாடு என்றுங் கூறப்படும். அவை வீரம், அச்சம், இழிப்பு, காமம் (சிங்காரம்), அவலம், உருத்திரம் (வெகுளி), நகை, நடுவுநிலை (சாந்தம்) என்பவை. சீவகன் என்பவன் அச்சம் என்னும் மெய்ப்பாடு தோன்ற ஒரு ஓவியம் எழுதினான் என்று திருத்தக்கதேவர் தம்முடைய சிந்தாமணிக் காவியத்தில் கூறுகிறார்.

6

மகதநாட்டு வீதியிலே குணமாலை என்னும் பெண்மணி சென்று கொண்டிருந்தபோது மதங்கொண்ட பட்டத்து யானை திடீரென்று அவளுக்கு எதிரே வந்து விட்டது. அதுகண்ட அவள் திடுக்கிட்டு அஞ்சி நடுங்கினாள். தப்பி ஓடமுடியாமல் என்ன செய்வது என்று தோன்றாமல் உடல் நடுங்க அவள் அப்படியே நின்று விட்டாள். அவ்வமயம் அவ்வழியாக வந்த சீவக குமரன் யானையின் முன்னே பாய்ந்து சென்று அதன் தந்தங்கள் இரண்டையும் கைகளினால் பற்றி ஒடித்து அதை அடக்கினான். அப்போது, யானையின் அருகில் அச்சத்தோடு நடுங்கிக்கொண்டிருந்த குணமாலையின் முகத்தை அவன் கண்டான். சீவகன் யானையை அடக்கியபிறகு அவள் அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டாள். சீவகன் தன் வீட்டுக்குப் போய்விட்டான். குணமாலையின் முகத்தில் தோன்றின அச்சம் என்னும் மெய்ப்பாடு அவனுடைய மனத்திலே நன்றாகப் பதிந்திருந்தது. அவன் வண்ணங்களைக் குழைத்து கிழியின்மேல் துகிலிகையினால் குணமாலையின் முகத்தில் தோன்றிய அச்சம் என்னும் மெய்ப்பாடு தோன்றும்படி ஓவியம் வரைந்தான். இதைக் காவியப் புலவரான திருத்தக்கதேவர் தம்முடைய காவியத்திலே கூறுகிறார்.