பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்காலத்து அணிகலன்கள்*

நமது பாரதநாட்டிலே, பண்டைக் காலத்திலே, ஆண்களும் பெண்களும் நகைகளை அதிகமாக அணிந்திருந்தார்கள். அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான நகைகளை அதிகமாக அணிந்தனர். அக்காலத்திலே ஆண்களும் பெண்களும் ஆடை களைக் குறைவாகவும், நகைகளை அதிகமாகவும் அணிந்தார்கள். நகைகளை எவ்வளவு அதிகமாக அணிகிறார்களோ அவ்வளவு நாகரிகமும் செல்வமும் உள்ளவர்கள் என்று மதிக்கப்பட்டார்கள். இந்தக் காலத்தில் அதிகமாக நகைகளை அணிகிறவர் அநாகரிகர் என்று கருதப்படுகின்றனர். அதிகமாக நாகரிகம் பரவாத கிராமங் களிலுங்கூட இக்காலத்தில் நகைகள் அணிவதைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

பண்டைக்காலத்து மக்கள் நிரம்ப நகைகளை அணிந்ததற்கும், இந்தக் காலத்து மக்கள் மிகக் குறைவாக நகைகளை அணிவதற்கும் முக்கியக் காரணங்கள் உண்டு. முற்காலத்திலே ஆண்களும் பெண் களும் மிகக் குறைந்த அளவில் ஆடை அணிந்தார்கள்; ஆனால், அதிகமாக நகைகைள் அணிந்தார்கள். அவர்கள் அரையில் மட்டும் ஆடையுடுத்தி அரைக்குமேலே வெற்றுடம்பாக இருந்தார்கள். இந்தக் காலத்திலே அரையின் கீழே வேட்டியுடுத்தி, உடம்புக்குப் பனியன், ஜிப்பா, கமிசு, ஷர்ட்டு, கோட்டு முதலிய ஆடைகளை அணிந்து உடம்பை மறைப்பதுபோல, அக்காலத்து ஆண்கள் உடம்பில் சட்டையணிவது வழக்கம் இல்லை. அரைக்கு மேலே வெற்றுடம்பாக இருந்தார்கள். இக்காலத்துப் பெண்கள் இரவிக்கை, ஜாக்கட், புடவைகள் அணிந்து உடம்பை மறைப்பது போல, அக்காலத்துப் பெண்கள் உடம்பை மறைக்கவில்லை. அவர்கள் அரையின் கீழே மட்டும் ஆடையணிந்து அரைக்குமேலே வெற்றுடம்பாக இருந்தார்கள்.

  • நுண்கலைகள் (1967) எனும் நூலில் இடம் பெற்ற கட்டுரை.