பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

உடம்பிலே அழகாக அணிந்து கொண்டார்கள். நம்பிக்கையான சேமிப்பு நிலையங்கள் இருக்கிறபடியாலும், கால் முதல் கழுத்து வரையில் பட்டும் பருத்தியும் உடுத்தும் வழக்கம் ஏற்பட்டுவிட்ட படியாலும், அதிகமாக நகைகளை அணிகிற வழக்கம் இப்போது இல்லை.

பண்டைக் காலத்தில் பெண்மணிகள் அணிந்த நகைகளைப் பற்றிக் கூறுவோம். நகைகளைப் பற்றிப் பேசும் போது, முதன் முதலில் கையணியாகிய வளைகளைப்பற்றிக் கூறவேண்டும். பண்டைக் காலத் தைப் போலவே இக்காலத்திலும் கைகளில் வளை அணிகிறார்கள். இக்காலத்தில் பொன் காப்பு, தங்க வளைகள், கண்ணாடி வளைகள் அணிகிறார்கள். கண்ணாடி வளைகளை அணிவது, முகம்மதியர் நமது நாட்டுக்கு வந்தபிறகு, சுமார் 500 ஆண்டுகளாக ஏற்பட்ட வழக்கம். பொன்காப்பு அணியும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது. ஆனால், பழைய காலத்தில் பெண்மணியின் கைகளில் சங்கு வளைகளை அணிந்தார்கள். வளை என்றாலே சங்கு என்று அர்த்தம். சங்கை வட்ட வடிவமாக அறுத்துச் செய்யப்பட்ட சங்கு வளைகளைப் பண்டைக் காலத்துப் பெண்மணிகள் அணிந்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் அன்று; பாரதநாடு முழுவதிலும் பெண்மணிகள் சங்கு வளைகளை அணிந்த வழக்கம் முற்காலத்தில் இருந்தது. ஏழைமக்கள் சாதாரண இடம் புரிச் சங்கு வளைகளை அணிந்துகொண்டார்கள். செல்வம் உள்ளவர்கள் பூவேலைகளும் கொடிவேலைகளும் செய்யப்பட்ட பலவித வர்ணங்கள் அமைந்த சங்கு வளைகளை அணிந்துகொண்டார்கள். பிரபுக்கள் குடும்பத் தையும் அசர குடும்பத்தையும் சேர்ந்த பெண்மணி வலம்புரிச் சங்கு வளைகளை அணிந்தார்கள். இடம்புரிச் சங்கு வளைகளைவிட வலம்புரிச் சங்கு வளைகள் விலையுயர்ந்தவை.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனின் அரசி, தன்னுடைய கைகளில் பொன்வளைகளையும் வலம்புரிச் சங்கு வளைகளையும் அணிந்திருந்தாள் என்று நெடுநல் வாடை கூறுகிறது.

6

“பொலந்தொடி நின்ற மயிர்வார் முன்கை

வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து

என்பது அது. (நெடுநல். அடி, 141-42)