பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள்

153

அரசர் முதல் ஆண்டிவரையில் எல்லாப் பெண்மணிகளும் அக்காலத்தில் சங்கு வளைகளைத்தான் அணிந்து கொண்டார்கள். கைம்பெண்கள் தமது கைகளில் அணிந்த சங்கு வளைகளை உடைத்துவிடுவர். கோவலன் மனைவி கண்ணகியார், தமது கணவன் இறந்தபிறகு தமது கைகளில் அணிந்திருந்த சங்கு வளைகளை உடைத்தெரிந்தார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

அக்காலத்தில் பெண்கள் எல்லோரும் சங்கு வளை அணியும் வழக்கம் இருந்தபடியினாலே, கொற்கை, குமரி முதலிய இடங்களில் சங்கு குளிக்கும் தொழிலும், சங்கை அறுத்து வளைசெய்யும் தொழிலும் பெருவாரியாக நிகழ்ந்தன. அக்காலத்தில் சங்குத் தொழில் முக்கியக் கைத்தொழிலாகவும் வாணிபப் பொருளாகவும் இருந்தது. காதுகளில் அணியும் குழையும், கைகளில் அணியும் மோதிரமும்கூடப் பண்டைக் காலத்தில் சங்கினால் செய்யப் பட்டன. பிற்காலத்திலே, சங்குவளை அணிகிற பழக்கம் மறைந்து விட்டபோது, சங்குத் தொழிலும் சங்கு வளை வாணிபமும் அடியோடு மறைந்துவிட்டன. சங்குவளை மறைந்துபோனாலும், இக்காலத்தில் தங்கவளைகள் வழக்கத்தில் இருந்துவருகின்றன.

முற்காலத்தில் பெருவழக்கமாக இருந்து இக்காலத்தில் மறைந்துகொண்டிருக்கிற பழைய நகை பாம்படம் என்பது; அது காதுக்கு அணிகிற கனமுள்ள பொன் நகையாகும். காதைக் குத்தித் துளை யாக்கி, அத்துளையைக் கடிப்பு என்னும் கனமான பொருளினால் பெரிய துளையாக வளரச் செய்து, நீண்டு தொங்கும் காதிலே குண்டலம், குழை, தோடு, பாம்படம் முதலிய நகைகளைப் பெண் மணிகள் அணிந்தார்கள். நீண்டு தொங்கும் காதிலே பெண்கள் பாம்படம் அணிந்தால், அது தோள் வரையில் தாழ்ந்து தொங்கும். ஆண் குழந்தையானாலும் பெண் குழந்தையானாலும் 5 வயது

னவுடன், மயிர்களைந்து காதுகுத்துவது வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. நீள்செவி வளர்க்கும் வழக்கம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டில் இருந்த பெரியாழ்வார் என்னும் வைணவ பக்தர் தமது பாசுரத்திலே, “கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி” நீள்செவி வளர்த்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார். தாழப் பெருக்கிய நீள் செவிகள் இக்காலத்தில் மறைந்து வருகின்றன. ஆனால், பாண்டிநாட்டிலே தாழப் பெருக்கிய நீள்செவிகள் ஓரளவு இப்போதும் காணப்படுகின்றன.