பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் - - 163

பிற்காலத்திலே கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் பெயர்பெற்ற கொற்கைக்குடாக் கடல் மணல் தூர்ந்து மறைந்து போயிற்று. தாமிரபரணி ஆறு பாய்ந்ததனால் அதன் வழியாக வந்த மண்ணும், கடல் அலைகள் கொண்டுவந்து தூர்த்த மணலும் சேர்ந்து, சிறிது சிறிதாக நாளாவட்டத்தில் கொற்கைக்குடாக்கடல் மண்கொழித்து மறைந்து போயிற்று. ஆகவே, பெயர் பெற்ற துறைமுகமாக இருந்த கொற்கைப் பட்டினம், பிற்காலத்தில் பழைய சிறப்பு இல்லாமல் இப்போது குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது. கொற்கைப்பட்டினத்திலிருந்து கடல் இப்போது ஐந்து மைல் தொலைவில் அகன்று போயிருக்கிறது. எனவே கொற்கைக்குடாக் கடல் அக்காலத்தில் நிலத்தினுள் ஐந்து மைல் உள்புகுந்திருந்ததென்பது தெரிகிறது.

இக்காலத்தில் மலையாள நாடாக மாறிப்போன சேரநாடு, பண்டைக்காலத்திலே தமிழ்நாடாக இருந்தது. தமிழ்நாடாக இருந்த சேரநாட்டைச் சேரமன்னர்கள் அரசாண்டார்கள். சேரநாட்டின் பழைய வரலாற்றுக் குறிப்புக்கள், பழைய தமிழ் நூல்களிலே காணப்படு கின்றன. பழைய சங்க நூல்களிலே காணப்படுகின்ற செய்திகளில் சேரநாட்டு முத்தைப் பற்றிய செய்தியும் ஒன்றாகும். இச்செய்தியைக் கேட்பவர் வியப்படைவார்கள். பாண்டிநாடுதானே முத்துக்குப் பெயர் பெற்றது. சேரநாட்டிலும் முத்து உண்டாயிற்றா? என்று கேட்பர்.

ஆம். பாண்டிய நாட்டுக் கொற்கைக் கடலிலே உண்டான முத்துக்கள் உலகப் புகழ் பெற்றவைதாம். தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் பாண்டியநாட்டு முத்துக்களைப் புகழ்ந்து பேசுகின்றன. பாரத தேசத்தில் மட்டும் அல்லாமல், எகிப்து தேசத்திலும் ரோமாபுரியிலும் பண்டைக்காலத்தில் பாண்டிநாட்டு முத்துக்கள் புகழ்பெற்றிருந்தன. ரோமாபுரிச் சீமாட்டிகள் தங்கள் நாட்டுப் பொன்னைக் கொடுத்துத் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். மேல்நாட்டு யவனக் கப்பல்கள் தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து, ஏனைய பொருள்களோடு முத்துக்களையும் எடுத்துக் கொண்டுபோயின.

பெயர்பெற்ற பாண்டிநாட்டு முத்துக்கள் உண்டான அதே காலத்தில், மேற்குக் கடற்கரையிலே, சேரநாட்டிலேயும் முத்துக்கள் உண்டாயின. பாண்டியநாட்டு முத்துக்களுக்கு அடுத்தபடியாகச் சேரநாட்டு முத்துக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பும் மதிப்பும் பெற்றிருந்தன. இதற்குத் தமிழ் நூலில் மட்டுமல்லாமல் வடமொழி நூலிலும் சான்று கிடைக்கின்றது.