பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

‘MUZIRIS' என்று கூறினர். முசிறியை வடமொழியாளர் ‘முரசி' என்றும், 'மரிசி” என்றும் வழங்கினார்கள். பிற்காலத்தில் மலையாளிகள் முசிறியை ‘முயிரி' என்று வழங்கினார்கள்; முயிரி, முயிரிக்கோடு என்றும் கூறப்பட்டது. (முசிறிக்கு அருகிலே சேர மன்னனின் தலைநகரமான வஞ்சி மாநகர் இருந்தது. வஞ்சி, வஞ்சிக்களம் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் திருவஞ்சிக்களம் என்று மருவிற்று.) முசிறி பிற்காலத்தில் கொடுங்கோளூர் என்றும், மலையாள மொழியில் கொடுங்ஙல்லூர் என்றும் பெயர் பெற்றது.

சூர்ணியாறு என்பது பெரியாற்றின் வடமொழிப் பெயர். 'மருத்விருத நதி' என்றும் இதற்குப் பெயர் உண்டு. பெரியாற்றைப் பேரியாறு என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இந்தப் பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சிகளைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது:

“நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இருமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப

என்பது சிலப்பதிகாரம் (காட்சிக் காதை, 21-23).

எனவே, கௌடல்லிய அர்த்தசாஸ்திரத்துக்குத் தமிழ்- மலையாள உரை எழுதிய இவ்வுரையாசிரியர் கூறுகிற முரசி, முசிறித் துறைமுகம் என்பதும், சூர்ணியாறு பெரியாறு என்பதும் ஐயமற விளங்குகின்றன. பேரியாறு கடலில் கலக்கிற இடத்துக்கு அருகிலே சேரனுடைய தலைநகரமான வஞ்சியும், அதற்கு அருகில் முசிறியும் இருந்தன. வஞ்சிமாநகரத்துக்கு அருகில் இருந்தவை கொடுமணம், பந்தர் என்னும் ஊர்கள். பந்தர் என்னும் ஊரிலேதான் முத்துக் குளிக்கும் சலாபம் இருந்தது போலும்.

பந்தர் என்னும் பெயர் அரபு மொழி. பந்தர் என்னும் அரபுச் சொல்லுக்கு அங்காடி அல்லது கடைத்தெரு என்பது பொருள். கி.மு. முதல் நூற்றாண்டிலேயே யவனராகிய கிரேக்கர் தமிழ் நாட்டுடன் வாணிகம் செய்ய வந்தார்கள். யவனர் வருவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே அராபியர் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு காண்டிருந்தனர். அவர்கள் அந்த இடத்துக்குத் தமது அரபு மொழியில் பந்தர் என்று பெயர் சூட்டியிருக்கலாம்.