பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

உலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். மிகப் பழைய காலந்தொட்டு நாகரிகம் பெற்று வாழ்ந்து வருகிற தமிழரும் தமக்கென்று அழகுக் கலைகளை யுண்டாக்கிப் போற்றி வளர்த்து வருகிறார்கள். இரண்டா யிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிற தமிழரின் அழகுக் கலைகள் மிக மிகப் பழமையானவை. மிகப் பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் சமூகத்தினர் இவ்வளவு நெடுங்காலம் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வில்லை. தமிழர் நாகரிகம் மிகப் பழமையானது என்பதைச் சரித்திரம் அறிந்த அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

"

ஆனால், தற்காலத்துத் தமிழ்ச் சமூகம், தனது பழைய அழகுக்கலைச் செல்வங்களை மறந்துவிட்டது; “தன் பெருமை தான் அறியா' சமூகமாக இருந்துவருகிறது. “கலை, கலை" என்று இப்போது கூறப்படுகிற தெல்லாம் சினிமாக் கலை, இசைக் கலைகளைப் பற்றியே. இலக்கியக் கலைகூட அதிகமாகப் பேசப்படுகிறதில்லை. ஏனைய அழகுக் கலைகளைப் பற்றி அறவே மறந்து விட்டனர். இக்காலத்துத் தமிழர். மறக்கப்பட்ட அழகுக் கலைகள் மறைந்துகொண்டே யிருக்கின்றன.

தமிழர் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கிற அழகுக் கலைகளைப்பற்றி இக்காலத்தவருக்கு அறிமுகப்படுத்து வதே இந்நூலின் நோக்கம். ஆனாலும், அழகுக் கலைகளைப் பற்றிப் பேசப் புகுந்தபோது, முறைமைபற்றி எல்லா அழகுக்கலைகளைப் பற்றியும் கூறப்படுகிறது.

அழகுக் கலைகளைப்பற்றி மேல்வாரியான செய்திகளே இந்நூலில் பேசப்படுகின்றன, அழகுக் கலைகளின் முற்ற முடிந்த செய்திகளைக் கூறுவது இந்நூலின் நோக்கம் அல்ல. அழகுக் கலைகளைப்பற்றிய மேல்வரம்பான, பொதுத் தன்மையைக் கூறும் நூல் ஒன்று வேண்டியிருப்பதை யுணர்ந்தே இந்நூல் எழுதப்பட்டது.