பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை*

நுண்கலைகளாகிய அழகுக் கலைகளில் தலை சிறந்தது இலக்கியக் கலை. ஏனென்றால், இலக்கியக் கலை ஏனைய கலை களைப் போலக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் இன்புறத் தக்கதன்று. அறிவினால் உணர்ந்து இன்புறத்தக்கது. இலக்கியக் கலை உரைநடையாகவும் இருக்கலாம், செய்யுளாகவும் இருக்கலாம். பொதுவாகச் செய்யுள் நடையிலேதான் இலக்கிய அழகு மிகுதியும் அமைகிறது என்று கூறுவர்.

இலக்கிய அழகுக் கலையின் இலக்கணம் என்ன வென்றால், அதை எத்தனைமுறை படித்தாலும் தெவிட்டாமல் இன்பந் தருவதாக இருக்கவேண்டும். சில இலக்கியங்களை ஒருமுறை படித்தபிறகு மறுமுறை படிப்பதற்கு விருப்பம் இருப்பதில்லை. சில இலக்கியங் களை எத்தனை முறை திருப்பித் திருப்பிப் படித்தாலும் அவை இன்பமும் உணர்ச்சியும் அழகு உள்ளனவாக இருக்கும். இவை தாம் சிறந்த இலக்கிய நுண்கலை எனப்படும்.

இலக்கியத்தில் கூறப்படும் விஷயங்கள் உண்மை அழகு இனிமை ஆகிய பண்புகளைக் கொண்டதாக இருந்தால், அவை படிப்போருக்கு உணர்ச்சியையூட்டி மகிழ்ச்சியைத் தரும். அப்படிப் பட்ட இலக்கியங்கள், அவை வசனமாக இருந்தாலும் செய்யுளாக இருந்தாலும், அழகுக் கலைகள் என்று கூறத்தகும்.

பொதுவாகச் செய்யுள் நடையிலே காவியங்கள் இயற்றப் படுவது வழக்கம். காவியங்களிலே பல செய்யுள்கள் அழகுக் கலை யுள்ளனவாக அமைந்து விடுகின்றன. நமது தமிழிலே செய்யுள் நடையுள்ள காவியங்களே உள்ளன. அவைகளில் அழகுக் கலை நிரம்பிய செய்யுள்கள் பலவற்றைக் காணலாம்.

  • தமிழர் வளர்த்த அழகுக்கலை (1956) நூலில் இடம்பெற்ற கட்டுரை.