பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

கீழ், மக்களுக்குச் செல்வம் வந்தால் அவர்கள் இறுமாப்புடன் இருப்பதுபோலக் காணப்பட்டது. முற்றிய கதிர்கள் சாய்ந்து தலை வணங்கியிருப்பது, கற்றறிந்த அறிஞர் அடக்கமாயிருப்பது போலக் காணப்பட்டது என்று நெற்பயிரில் தான்கண்ட உண்மைப் பொருளை நயம்படக் கூறுகிறார். இக் கருத்துக்களை யெல்லாம் ஓவியப் புலவனும், சிற்பக் கலைஞனும் தமது சித்திரத்திலும், சிற்பத்திலும் காட்டமுடியாது.

சூளாமணி

இனி, சூளாமணிக் காவியம் இயற்றிய தோலாமொழித் தேவரின், ஒரு செய்யுளைக் காட்டுவோம். மாலை நேரத்திலே அகன்ற வானத்திலே வெண்ணிலா, பாலைப் பொழிவது போல நிலவைப் பொழிந்துகொண்டிருக்கிறது. நிலவைப் பருகுவதுபோல ஆம்பல் மலர்கள் மலர்ந்து மகிழ்கின்றன. ஆனால், அதே குளத்தில் இருக்கும் தாமரைப் பூக்கள், தம் இயல்புப்படி மாலை நேரமானவுடன் இதழ்களைக் குவித்து மூடிக் கொள்கின்றன. இது, நிலவைக் கண்டு முகம் சுளிக்கும் காட்சிபோல் தோலாமொழித் தேவருக்குத் தோன்றுகிறது. அப்போது அவர் உள்ளத்திலே உலகியல் உண்மை யொன்று உதிக்கிறது. உலகத்திலே நல்லவரைக் கண்டு மகிழ்பவரும் இருக்கிறார்கள்; அந் நல்லவரைக்கண்டு முகங்கடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு மிக்க நல்லவராக இருப்பவர் உலகத்தில் இலர் என்னும் உண்மை அவர் கருத்தில் தோன்றுகிறது. அக் கருத்தை அவர் சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

“அங்கொளி விசும்பிற் றோன்றும்

அந்திவான் அகட்டுக் கொண்ட

திங்களங் குழவிப் பால்வாய்த்

தீங்கதிர் அமுதம் மாந்தித்

தங்கொளி விரிந்த ஆம்பல்,

தாமரை குவிந்த ஆங்கே

எங்குளார் உலகில் யார்க்கும்

ஒருவராய் இனிய நீரார்.”2

உலகியல் உண்மை ஒன்றையும் இயற்கைக் காட்சி ஒன்றையும் அமைத்து இலக்கியக் கலைஞன் அழகும், இனிமையும் உண்மையும் தோன்ற அதை இச் சொல்லோவியம் போன்று, சிற்பக் கலைஞனும், ஓவியக் கலைஞனும் சிற்பமும் ஓவியமும் அமைத்துக் காட்டமுடியாது.