பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

முற்காலத்தில் தமிழ் ஐம்பெருங் காவியங்கள் இருந்தன, அவை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன. இவற்றில் குண்டலகேசியும், வளையாபதியும் இப்போது மறைந்துவிட்டன.

இப்போது தமிழில் சிறந்த காவியங்களாகக் கருதப்படுபவை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, கம்பராமாயணம், நைடதம், நளவெண்பா முதலியவை. இவற்றுடன் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றையும் கூறலாம். தமிழ்மொழிக் காவியவளம் நிறைந்த சிறந்த மொழி. இதில் உள்ள காவியக்கலைகளை யெல்லாம் இங்கு எழுதிக் காட்ட முடியாது. இது இடமும் அல்ல. காவியச் சுவையுள்ள அறிஞர் அவற்றைத் தாமே கண்டு உண்டு சுவைப்பாராக.

காரிகை கற்றுக் கவிபாடலாம். ஆனால், கவியிலே உண்மையும், அழகும், இனிமையும் அமையப் பாடுவது அரிது. காவியங்களையும் இயற்றலாம். ஆனால், அதில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்றும் எட்டுவகையான சுவைகளையும் அமைத்துக் காவியம் அமைப்பது அரிது. இவை யெல்லாம் பொருந்த அமையு மானால் அதுவே இலக்கிய நுண்கலை என்று போற்றப்படும். காவியக் கலையைப் போற்றி வளர்ப்பது நாகரிகம் பெற்ற மக்களின் கடமையாகும்.

நாடகக் கலை

இலக்கியக்கலை (காவியக்கலை)யுடன் தொடர்புடையது நாடகக்கலை என்று முன்னரே கூறினோம். காவியப்புலவன், காவியத்தில் வருகிற உறுப்பினர்களின் இயல்புக்குத் தக்கவாறு அவர்களின் நடையுடைய பாவனைகளைக் கூறுவது போலவே, நாடக ஆசிரியன், நாடகப் பாத்திரங்களின் இயல்புக்குத் தகுந்தபடி பேச்சுகளையும் அச்சம், வீரம், பெருமிதம், வெகுளி, வியப்பு முதலிய சுவைகளையும் அமைக்கிறான். ஆகவே காவியத்தின் தொடர்பு டையதே நாடகம் ஆகும்.

நாடகம் என்றால் என்ன? நாடகம் என்பது ஒருவன் செய்ததனை ஒருவன் வாங்கிக்கொண்டு பின்னர்அதனைச் செய்துகாட்டுவது. இதனால் நாடகம் என்று பெயர் பெற்றது; அதாவது நடித்தல் என்று பெயர் கூறப்பட்டது.