பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்*

அழகுக் கலைகள் எவை?

மனிதன் மிகப்பழைய காலத்திலே காட்டுமிராண்டியாக வாழ்ந்தான். இருக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் அக்காலத்திலே மனிதன், விலங்குபோல அலைந்து திரிந்தான். பிறகு அவன் மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக நாகரிகம் அடைந்தான். வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரிந்து கொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரிக வாழ்க்கை பெற்றான். ஆனால், மனிதன் நாகரிக வாழ்க்கை யடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்ட பலவகையான தொழில்களேயாகும். ஒவ்வொரு தொழிலையும் கற்றுத் தேர்வதற்கு அவனுக்குப் பல நூற்றாண்டுகள் கழிந்தன.

1

மனிதனுடைய நல்வாழ்விற்கு உதவுகிற எல்லாத் தொழில் களையும் கலைகள் என்று கூறலாம். உழவு, வாணிபம், நெசவு, மருத்துவம் முதலிய தொழில்கள் யாவும் கலைகளே. பண்டைக் காலத்திலே நமது நாட்டிலே அறுபத்துநான்கு கலைகள் இருந்தன என்று மணிமேகலை முதலிய நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் அறுபத்துநான்கு கலைகள் இருந்தன என்றால், பல துறையிலும் நாகரிகம் பெருகியுள்ள இந்தக் காலத்திலே, கலைகளின் எண்ணிக்கை மிகமிகப் பெருகியிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், நாம் இங்கு ஆராய்ப்புகுவது இந்தப் பொதுக் கலைகளைப்பற்றி அல்ல. இப்பொதுக் கலைகளுக்கு வேறு பட்ட அழகுக் கலைகளைப் பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறோம்.

  • தமிழா வளர்த்த அழகுக் கலைகள் (1956) எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை.