பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /211

யோனியும் விருத்தியும்

நாடகக் கதையை நான்கு விதமாக அமைக்கலாம். அவை: 1. உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருள் மேல் நாடகக் கதை எழுவது 2 இல்லோன் தலைவனாக (கற்பனா பாத்திரமாக) இல்லதோர் பொருள்மேல் நாடகக் கதை எழுதுவது. 3. உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருள்மேல் நாடகம் எழுதுவது. 4. இல்லோன் தலைவனாக உள்ளதோர் பொருள்மேல் எழுதுவது. இவ்வாறு பிரிப்பதற்கு யோனி என்று பெயர் கூறுவர்.

“உள்ளோர்க் குள்ளதும் இல்லோர்க் குள்ளதும் உள்ளோர்க் கில்லதும் இல்லோர்க் கில்லதும் எள்ளா துரைத்தல் யோனியாகும்

என்பது சூத்திரம்.

இவ்வாறு நாடகம் அமைக்கும்போது, தெய்வங்களையும் முனிவர்களையும் நாடகத் தலைவராக அமைப்பது சாத்துவதி என்று கூறப்படும். அறத்தை (ஒழுக்கத்தைக்) கூறுவது இதன் கருத்தாகும்.

வீரர்களை நாடகத் தலைவராக்கி நாடகம் அமைப்பது ஆரபடி என்று பெயர்பெறும். புறப்பொருளை (வீரத்தை) விளக்குவது இதன் நோக்கமாகும்.

காதலன் காதலி இவர்களைத் தலைவராக நாடகம் அமைப்பது கைசிகி என்று பெயர்பெறும். இது, அகப்பொருளை (காதலை) விளக்குவதாகும்.

கூத்தன் தலைவனாக நடன்நடி இவர்களை நாடகம் ஆட அமைப்பது பாரதி என்று பெயர்பெறும்.

இந்த நான்கு அமைப்புக்கும் விருத்தி என்பது பெயர்.

நாடகத்தின் சந்தி

இனி, நாடகத்தைப் பிரிக்கவேண்டிய பிரிவுகளைக் கூறுவோம். இது நாடகத்தின் இன்றியமையாத பகுப்பு ஆகும். நாடகக் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவுக்குச் சந்தி என்பது பெயர். சந்தியை வடமொழியாளர் அங்கம் என்றும் ஆங்கில மொழியினர் ஆக்ட் (Act) என்றும் கூறுவர், சந்தி ஐந்து ஆகும். அதாவது நாடகக் கதையை ஐந்து சந்தியாகப் பிரிக்க வேண்டும். ஐந்து சந்திகளின் பெயர்களாவன:-