பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

ஐந்தாவதாகிய காவியக்கலை மேற்கூறிய கலைகள் எல்லா வற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால் இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புறமுடியாது, காதினால் கேட்கக் கூடுமாயினும், கேட்பதனாலே மட்டும் மகிழமுடியாது. காவியக் கலையைத் துய்ப்பதற்கு மனவுணர்வு மிக முக்கியமானது. மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புறத்தக்கது ஆகையினாலே, காவியக் கலை, கலைகளில் சிறந்த நுண்கலை (Fine Art) என்று கூறப்படுகிறது.

இசைக் கலையோடு தொடர்புடைய நடனம் நாட்டியம் கூத்து என்பனவும் காவியக் கலையுடன் தொடர்புடைய நாடகமும் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் மகிழத்தக்கன.

நாகரிகம் பெற்ற மக்கள் உலகத்திலே எங்கெங்கெல்லாம் வாழ்கி றார்களோ அங்கங்கெல்லாம், அவர்கள் அழகுக் கலைகளை வளர்த்தி ருக்கிறார்கள். அழகுக் கலைகள் மனித நாகரிகத்தின் பண்பாடாக விளங்குகின்றன. நாகரிகம் பெற்ற எல்லா நாட்டிலும் அழகுக் கலைகள் வளர்ச்சி யடைந்திருந்தாலும், இந்த நுண் கலைகள் எல்லாம் எங்கும் ஒரேவிதமாக வளரவில்லை. அழகுக் கலைகளின் அடிப்படையான தன்மை எல்லாநாட்டிலும் ஓரேவிதமாக இருந்தபோதிலும், அதாவது கற்பனையையும் அழகையும் இன்பத்தையும் தருவதே அழகுக் கலைகளின் நோக்கமாக இருந்தபோதிலும், அவை வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உருவடைந்து வளர்ந்திருக்கின்றன.

அந்தந்த நாட்டின் இயற்கை யமைப்பு, தட்ப வெப்பநிலை, சுற்றுச் சார்பு, மக்களின் பழக்கவழக்கங்கள், மனோபாவம், சமயக் கொள்கை முதலியவற்றிற்கு ஏற்றபடி அழகுக் கலைகள் வெவ்வேறு விதமாக உருவடைந்திருக்கின்றன. இக்காரணங்களில்தான் அழகுக் கலைகள் எல்லாம் எல்லா நாட்டிலும் ஒரே விதமாக இல்லாமல் வெவ்வேறு விதமாக உள்ளன. இக்காரணங்களினால்தான், நமது நாட்டு அழகுக் கலைகளும், கிரேக்க நாட்டு அழகுக் கலைகளும், சீன நாட்டு அழகுக் கலைகளும், உரோம நாட்டு அழகுக் கலைகளும் ஏனைய நாட்டு அழகுக் கலைகளும் வெவ்வேறு விதமாக வளர்ச்சி யடைந்துள்ளன.

ஈண்டு, முத்தமிழ்ப் பேராசிரியர் உயர் திரு விபுலானந்த அடிகளார், தமது யாழ் நூலிலே அழகுக் கலைகளின் பொதுவான சில இலக்கணங்களைக் கூறியுள்ளதை எடுத்துக் காட்டுவது சிறப்பு டையதாக இருக்கும். அவை பின்வருமாறு:-