பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 245

விதானச் சுவரில் எழுதப்பட்டுள்ள தாமரைக் குளத்தின் இயற்கை எழில்மிக்க ஓவியம் கண்களுக்கு விருந்தளித்து மனத்தை மகிழ்விக்கின்றது. இந்த ஓவியக்குளத்தில் தாமரையும் அல்லியும் செழித்துப் படர்ந்து இலைகளும் பூக்களுமாகக் காட்சி அளிக்கின்றன. தாமரைக் கொடியின் இடையிலே நீரில் மீன்கள் நீந்துகின்றன. நீர்வாழ் பறவைகள் தாமரைப் பூக்களிலும் தாமரை இலைகளிலும் அமர்ந்தும் பறந்தும் விளையாடுகின்றன. எருமை ஒன்று குளத்து நீரில் நிற்கிறது. மூன்று ஆடவர்கள் குளத்தில் இறங்கித் தாமரைப் பூவையும் அல்லி மலரையும் பறிக்கிறார்கள். அவர்களில் ஒரு ஆள் மலர்ந்த தாமரைப் பூக்களை நாளத்தோடு பறித்துக் கற்றையாகக் கட்டித்தோள் மேல் வைத்திருக்கின்றார். இவ்வளவு இயற்கை எழிலோடு இந்தத் தாமரைக் குளத்தின் ஓவியம் காணப்படுகிறது. இந்த ஓவியம் தக்கிண ஓவியத்தை (தென்னிந்திய ஓவியக் கலையைச்) சேர்ந்தது. இந்த தென்னிந்திய ஓவியக்கலை வடக்கே விந்திய மலையிலிருந்து அஜந்தா, பாக் மலைக்குகை ஓவியங்களும், சித்தன்ன வாசல் குகை ஓவியங்களும், இலங்கையில் சிகிரியாமலைச் சுவர் ஓவியங்களும் ஒரே ஓவியமரபைச் சேர்ந்தவை.

தமிழ்நாட்டு ஜைனர் தங்கள் மதத்தின் சார்பாகச் சிற்பக்கலை யையும், ஓவியக் கலையையும் வளர்த்துப் போற்றினார்கள் என்பது நன்கு தெரிகின்றது.