பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் புலவரும் ஓவியக் கலைஞரும்*

அழகுக் கலைகளுக்கு நுண்கலை என்றும், கவின்கலை என்றும் பெயர் உண்டு. அழகுக் கலைகளில் முக்கியமானவை கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பவை. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை இம்மூன்றும் கண்ணால் காணக்கூடியவை. இசைக்கலை செவியினால் உணரப் படுவது. காவியக்கலை (கவிதை) மனத்தினால் உணரப்படுவது. இக்கட்டுரையில் காவியக்கலைக்கும் ஓவியக்கலைக்கும் உள்ள சில ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் ஆராய்வோம். காவியக்கலை என்பது கவிதை அல்லது செய்யுள். ஓவியக்கலை என்பதில் சிற்பம் ஓவியம் இரண்டும் அடங்கும்.

காவியப் புலவர் (கவிஞர்) தம்முடைய கவிதைகளைச் சொல்லோவியமாக அமைத்துச் செய்யுள் செய்கிறார். அச்செய்யுளில் பலவிதமான சந்தங்களையும் உவமைகளையும் கற்பனைகளையும் அமைத்து அழகு செய்கிறார். நன்றாக அமைத்த செய்யுட்களைப் படிக்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் உண்டாகின்றன. இது போன்று, சிற்ப ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய சிற்ப ஓவியங்களிலே பலவித அழகுகளை அமைத்துச் சிறப்பிக்கிறார்கள். அவற்றைக் காணும்போது மகிழ்ச்சியும் இன்பமும் தோன்றுகின்றன.

காவியப் புலவரின் கவிதையிலே எவ்வளவு சிறப்பு உள்ளதோ அவ்வளவு சிறப்பு சிற்ப ஓவியக்கலைகளிலும் இருக்கின்றன. காவியப் புலவரும், ஓவியக் கலைஞரும் தம்முடைய கலைகளைப் பொறுத்தவரையில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர் அல்லர்; சமமானவர்களே. உலகத்திலே இயற்கையில் காணப்படுகிற மலை, ஆறு, கடல், மரம், வயல், மான், யானை, பசு, எருது, மயில், கிளி முதலான பொருள்களைக் காவியப் புலவன் தன்னுடைய கவிதைகளில் எழுத்து ஓவியமாக (சொல் ஓவியமாக) செய்யுள் அமைக்கிறான். இந்தப் * ஆராய்ச்சி இதழ் 3:2 அக். 1972