பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண் கலைகள்*

திகாலத்தில் மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் விலங்கு போல அலைந்து திரிந்தான். பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் அடையத் தொடங்கி வசிக்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளக் கற்றுக் கொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரிக வாழ்க்கையடைந்தான். மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்ட பலவகையான தொழில்களே யாகும். ஆனால் அவன் இந்த நிலையை யடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன.

மனித வாழ்க்கைக்குப் பயன்படுகிற எல்லாத் தொழில்களும் கலைகளே. உழவு, வாணிகம், நெசவு, மருத்துவம், உணவு சமைத்தல், தச்சுத்தொழில், மட்பாண்டம் செய்தல், கன்னாரத்தொழில், கருமான் தொழில், மீன்பிடித்தல், ஆடுமாடு வளர்த்தல், தையல் வேலை, சலவைத் தொழில், சவரத் தொழில் முதலான தொழில்கள் எல்லாம் கலைகளே. ஆனால் இந்தக் கலைகள் பொதுக் கலைகள்; இவை நுண்கலைகள் ஆகா.

வாழ்க்கைக்கு உதவுகிற பலவகைத் தொழில்களில் வளர்ச்சியும் தேர்ச்சியும் அடைந்து, உணவு, உடை, உறையுள், கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்று நாகரிகமாக வாழக் கற்றுக்கொண்ட மனிதன், உண்டு உடுத்து உறங்குவதோடு மட்டும் மனவமைதி பெறுவதில்லை. அவன் மனவமைதியை, நிறைமனத்தைப் பெறுவதற்கு வேறு கலைகளை விரும்புகிறான். நுண்கலைகள் மனிதனுக்கு நிறைமனத்தை யளிக்கின்றன.

மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி, அழகையும், இன்பத்தையும் அளிக்கிற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. *நுண்கலைகள் (1967) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.