பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பெருங்கதை என்னும் உதயணன் கதையும் ஜைன சமய காவியம். இதனை இயற்றிய புலவர் கொங்கு வேளிர் என்னும் சமணப் பெரியார். இக் காவியத்திலும் இசைக் கலையைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. இக்காவியத் தலைவனாகிய உதயணன் என்னும் அரச குமாரன், இளமை வயதில் பிரமசுந்தர முனிவர் இடத்தில் இசைக் கலையைப் பயில்கிறான். மேலும், கோடபதி என்னும் யாழ் வாசிப்பதில் வல்லவனாக விளங்குகிறான். அவனுடைய யாழின் இசையைக் கேட்டு யானைகளும் இவன் வசமாகின்றன.

பிறகு உதயணன் அவந்தி நாட்டரசன் மகள் வாசவதத்தை என்பவளுக்கு யாழ் வாசிக்கக் கற்பிக்கிறான். பிறகு பதுமாபதி என்னும் அரச குமாரிக்கும் யாழ் கற்பிக்கிறான். இச் செய்திகளைப் பெருங் கதை கூறுகிறது. சிறப்பாக யாழைப்பற்றிப் பெருங் கதை, மகத காண்டம்: 14. நலனாராய்ச்சி 15 யாழ்நலம் தெரிந்தது என்னும் பகுதிகளும், வத்த காண்டம், யாழ் பெற்றது என்னும் பகுதியும் யாழ்ச் செய்திகளைக் கூறுகின்றன.

மற்றொரு ஜைன சமய நூலாகிய ஸ்ரீ புராணம், 23-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாத சுவாமி புராணத்தில் வசுதேவன் வரலாற்றைக் கூறும் இடத்தில் இசைக் கலையைப் போற்றிக் கூறுகிறது. சம்பாபுரத்து அரசன் மகளும் ஒரு கந்தர்வதத்தை. அதாவது கந்தர்வ வித்தையாகிய இசைக் கலையில் தேர்ந்தவள். அவளை இசையில் வெற்றி பெறுகிறவர்கள் அவளை மணஞ் செய்யலாம் என்று அரசன் பறையறைந்து அதன் பொருட்டு இசையரங்கு ஏற்படுத்துகிறான். பல அரச குமாரர்கள் வந்து அரச குமாரியுடன் பாடி தோற்றுப் போகின்றனர். கடைசியில் வசுதேவர் வந்து இசை பாடியும் யாழ் வாசித்தும் வெற்றிபெற்றுக் காந்தர் வதத்தையை மணஞ் செய்கிறார்.

இச் செய்திகள், ஜைன சமயத்தவரால் எழுதப்பட்ட ஜைன சமய நூல்களில் காணப்படுகின்றன. உண்மை இப்படி இருக்க, ஜைனர் இசைக் கலையை அழித்தனர் என்று கூறுவது அறியாதார் கூற்றாகும்; அல்லது, வீண்பழி சுமத்துகிற சமயப் பகைவர் கட்டிய கதையாகும். தமிழில் இலக்கண இலக்கியங்களை எழுதித் தமிழ் மொழியை வளர்த்தது போலவே, இசைக் கலையையும் சமணர் வளர்த்தார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.