பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 67

தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலஞ் செய்து புகுந்த பின்றைத் தலைக்கோல் கோடல் தக்க தென்ப.

என்பது சூத்திரம்.

ஆடல்பாடல் என்னும் கலைகளில் தேர்ந்த மகளிர்க்குத் தலைக்கோலி என்னும் பட்டம் வழங்கப்பட்டது. தலைக்கோல் அரிவை என்றும் கூறுவர். சோழர் காலத்துச் சாசனங்களில் தலைக்கோலிப் பட்டம் பெற்றவர்களின் பெயர்கள் சில காணப் படுகின்றன. நாட்டியக் கலையைப் பயில்விக்கும் நட்டுவருக்குத் தலைக்கோலாசான் என்னும் பெயரும் வழங்கி வந்தது.

நாட்டியம் ஆடி முதிர்ந்த மகளிர்க்குத் தோரிய மடந்தையர் என்றும் தலைக்கோல் அரிவையர் என்றும் பெயர்கள் உண்டு. இவர்கள் ஆடிமுதிர்ந்த பின்பு, பாடல் மகளிராய் ஆடல் மகளிர் காலுக்கு ஒற்றறுத்துப் பாடுபவர்.

கலைப் போட்டி

மிகப் பழங் காலத்திலேயே தமிழர் இசைக்கலையை நன்கு போற்றி வளர்த்தார்கள். தமிழர் வளர்த்த முத்தமிழில் இசைத் தமிழும் ஒன்றாக இருந்தது. இசைக்கலையை வளர்த்ததோடு அமையாமல், அவை கூட்டி இசை வல்லவர்களைப் பாடச்செய்து வெற்றி வெற்றவர்களைப் பாராட்டியும் பட்டம் வழங்கியும் நன்கொடை யளித்தும் போற்றினார்கள். புறப்பொருள் வெண்பா மாலை என்னும் நூலிலே பெருந்திணைப் படலத்திலே வென்றிப் பெருந்திணை என்னும் பிரிவிலே யாழ் வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி என்று இசைச் சார்பாக மூன்று வென்றிகள் (வெற்றிகள்) கூறப்படுகின்றன.

யாழ் வென்றி

யாழ் வென்றி என்பது யாழில் ஏழிசையையும் அமைத்துத் திறம்பட வாசித்து வெற்றியடைவது. பண்டைக்காலத்திலே யாழ் என்னும் இசைக் கருவி தமிழ் நாட்டிலே சிறப்பாக வழங்கி வந்தது. இப்போது யாழ் மறைந்து விட்டது. அதற்குக் பதிலாக வீணை என்னும் கருவி வழங்குகிறது. யாழ் வென்றியைப் பற்றிப் பெருந்திணைப் படலத்தில் கூறுவது வருமாறு: