பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

175

பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள். இந்தத் திருப்பாலைவனத்து யானைக் கோயில்போல அமைந்திருக்கிற இன்னொரு கோயில் (நான்கண்டவரையில்) காஞ்சிபுரத்துக்குத் தெற்கே மாகறல் என்னும் ஊரில் இருக்கிற சிவன் கோயில் கட்டடம் ஆகும். ஆனால், மாகறல் ஆனைக் கோயிலை விட திருப்பாலை வனத்து யானைக் கோயிலில் அழகான சிறப்புகள் இருக்கின்றன. இந்தக் கோவில், பிற்காலச் சோழர் ஆட்சியில் ஏறக்குறைய கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருப்பாலைவனம் என்னும் ஊரின் பெயரை பார்க்கும்போது இவ்வூரில் பண்டைக் காலத்துப் பாலைமரங்கள் அதிகமாக இருந்தன என்பதை அறிகிறோம். பாலைமரம் இந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது.

இவ்வளவு அழகான கட்டடம் உள்ள இந்தக் கோயிலைப் பற்றி ஒரு நல்ல அழகான புத்தகம் ஒன்றை இக்கோவில் அதிகாரிகள் வெளியிடுவார்களானால் நலமாக இருக்கும். யாரும் இல்லாத காட்டிலே ரோஜாவும், மல்லிகையும், தாமரையும் அழகாகப் பூத்திருக்குமானால் அவற்றின் அழகு ஒருவருக்கும் தெரியாமலே போகும். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கோவிலின் செய்தி. இதன் அருகில் உள்ள பழவேற்காடு என்னும் ஊர். பழவேற்காட்டைப்பற்றிச் சில செய்திகள் சொல்ல விரும்புகிறேன். பாலைமரங்கள் இருந்த இடம் பாலைவனம் (திருப்பாலைவனம்) என்று பெயர் பெற்றதுபோல, வேல்காடு (வேல மரக்காடு) இருந்த இடம் வேற்காடு என்று பெயர் பெற்றது. பழவேற்காடு என்றால், பழமையான வேல்காடு என்பது பொருள். பூந்தமல்லிக்கு அருகில் திருவேற்காடு என்னும் ஊர் உண்டு. அந்த ஊரிலும் ஒரு கஜபிருஷ்ட விமானக் கோயில் (ஆனைக் கோயில்) உண்டு. மரங்கள் நிறைந்த காடுகள் பிற்காலத்திலே ஊர்களாக மாறிய போது, அந்தந்தக் காடுகளின் பெயரே அந்தந்த ஊர்களுக்கு பெயராக அமைந்துவிட்டன. ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, காய்க்காடு, மாங்காடு, தில்லைவனம், பாலைவனம், கடம்பவனம் முதலிய பெயர்கள் எல்லாம் அவை ஆதிகாலத்தில் அந்தந்த மரங்களையுடைய காடுகளாக இருந்தன என்பதைத் தெரிவிக்கின்றன.

"