பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

283

இங்குக் கொள்ளத்தகுந்தது. ஏனென்றால் வின்சன் ஸ்மித் முதலிய சரித்திர ஆசிரியர்கள், இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மேல் படையெடுத்து வந்த போது போரில் கொல்லப்பட்டான் என்று எழுதிகிறார்கள். ஆகையினாலே, சமராபிராமன் சளுக்கியனை (இரண்டாம் புலிகேசியைக்) கொன்றான் என்று கூறுவதே பொருத்த மானது.

இதனால், பரதுர்க்கமர்த்தனனும் அவன் மகனான சமரா பிராமனும் மாமல்லனான முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பதும், மகனான சமராபிராமன் புலிகேசியைப் போரில் கொன்றான் என்பதும் தகப்பனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபி போரில் கலந்து கொண்டான் என்பதும் தெரிகின்றன.

புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனின் கர்னூல் சாசனங்களில், தன் தந்தையாகிய புலிகேசியை மூன்று அரசர்கள் சேர்ந்து தோல்வியடையச் செய்தார்கள் என்று கூறுவது இங்கு நினைவுகொள்ளத் தக்கது. இரண்டாம் புலிகேசியை வென்ற மூன்று அரசர்கள் யாவர்? மாமல்லனான நரசிம்மவர்மக் ஒருவன்; அவனுடன் தங்கியிருந்த இலங்கை மன்னான மானவம்மா என்பவன் இரண்டா மவன்; கொடும்பாளூரை அரசாண்ட யதுகுலவேள் (தந்தையும் மகனுமான பரதுர்க்கமர்த்தனனும் சமராபிராமனும். இவர் இருவரும் ஒரே குடும்பத்தவர் ஆகையால் இருவரையும் ஒருவராகக் கொள்க.) மூன்றாமவன்.

சமராபிராமன், வாதாபிகொண்ட நரசிம்மவர்மனுக்குப் பிறகும், இரண்டாம் மகேந்திரவர்மன் முதலாம் பரமேசுவரன் ஆகிய பல்லவ அரசர் காலத்திலும் இருந்தவனாகத் தெரிகிறான். இவனைப்பற்றிய இன்னொரு சிறப்பான செய்தி என்னவென்றால், இவன், சோழன் மகளான அனுபமை என்பவளை மணஞ்செய்து கொண்டான். என்பதே. முடியுடை வேந்தராகிய சேர சோழ பாண்டியர், சிற்றரசராகிய வேளிரிடம் பெண்கொள்வது மரபு; ஆனால் வேளிருக்குத் தம் பெண்ணைக் கொடுப்பதில்லை. முடியுடை மன்னருக்குத் தம் பெண்கொடை கொடுப்பவர் வேளிர் என்பது தொன்றுதொட்டு வந்த வழக்கம். இதனை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் கூறுகிறார்.