பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

287

காலத்தில் இரண்டாவது வாதாபிப்போர் நடந்ததாக இவர் கூறுகிறார். குறுகோடு என்னும் குறுக்கோட்டையை நந்திவர்மன் வென்றதை நந்திக்கலம்பகம் கூறுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, நந்திவர்மன் கீழ் விக்ரமகேசரியின் பாட்டனான பரதுர்க்கமர்த்தனன் சிற்றரசனாக இருந்து குறுகோட்டைப் போரில் கலந்திருக்கக்கூடும் என்று இவர் யூகிக்கிறார். இராஷ்டிரகூட அரசனுடன் நிகழ்ந்த அந்தக் குறுக்கோட்டைப்போரிலே, ராஷ்டிரகூடருக்கு உதவியாக சளுக்கிய அரசனும் வந்திருக்கக்கூடும். அப்படி உதவிக்கு வந்த சளுக்கிய அரசனைப் பரதுர்க்கமர்த்தனன் கொன்றிருக்கக் கூடும். அதனால் அவனுக்கு வாதாபிஜித் என்று பெயர் வந்திருக்கக்கூடும். அல்லது, குறுக்கோட்டையை வென்றபிறகு, வாதாபி நகரத்தில் சென்று போர் செய்து அந்நகரை வென்றிருக்கக்கூடும். இவ்வாறு எல்லாம் இந்த ஆ சிரியர் பொறுப்பில்லாமல் ஆதாரங்களையும் சான்றுகளையும் காட்டாமல் மனம் சென்றபடியெல்லாம் யூகித்துக் கொண்டு போகிறார்.

இவர் யூகிக்கும் யூகமும் ஒப்புக்கொள்ளத்தக்கதாயிராமல் முரண்படுகிறது. குறுக்கோட்டைப்போரை வென்றால் “குறுகோடுஜித்” என்று பெயர் ஏற்படுமே தவிர வாதாபிஜித் என்று பெயர் உண்டாகக் காரணம் இல்லை அல்லவா? ஆகவே, மூன்றாம் நந்திவர்மன் குறுக்கோட்டையை வென்ற பிறகு, வாதாபி நகரத்தையும் வென்றான் என்று இவர் யூகிக்கிறார் இதற்கு யாதொரு சான்றும் கிடையாது. நந்திக்கலம்பகம், நந்திவர்மன் வாதாபியை வென்றான் என்று எங்கும் கூறவில்லை, அன்றியும் சாசனங்களும் இல்லை. இவ்வாறு இல்லாத ஒன்றைக் கற்பித்துக் கொள்கிறார் இந்த ஆசிரியர்.

கொடும்பாளூர்ச் சிற்றரசர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், முத்தரை யரால் அடக்கப்பட்டுப் பெருமை குன்றியிருந்தனர். ஆகவே அவர்கள் 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடந்த குறுக்கோட்டைப் போரில் கலந்துக் கொண்டனர் என்று கூறுவதே பொருந்தாது. 8, 9-ஆம் நூற்றாண்டுகளில், பல்லவருக்கு உதவியாக இருந்த சிற்றரசர் முத்தரையர் என்பது சாசனங்களினால் தெரிகிறது. முத்தரையர், கொடும்பாளூர் அரசரை வென்று அடக்கியபிறகே சிறப்படைந்தனர் என்பதும் அறியத்தக்கது.

இவற்றையெல்லாம் ஆராயும்போது, கொடும்பாளூர் அரசன் பரதுர்க்கமர்த்தனன் வாதாபிநகரப் போரில் கலந்து கொண்டது,