பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

291

ஆகவே, பரதுர்க்கமர்த்தனனாகிய வாதாபிஜித் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவன் என்பதும் அவன் கி.பி. 642-இல் நிகழ்ந்த வாதாபிப் போரில் கலந்துகொண்டு அப்போரை வென்றவன் என்பதும் தெளிவாகிறது. எனவே அவன் பேரனாகிய பூதிவிக்ரம கேசரியும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இறுதியில் அல்லது கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இருந்தவனாவன் என்பதே தெரிகிறது. பிற்காலத்தில் மற்றொரு வாதாபிப் போர் நடந்திருக்கக் கூடும் என்று சிலர் கருதுவதற்குச் சான்றுகள் ஒன்றேனும் இல்லை.

பேர்பெற்று புகழுடன் இருந்த கொடும்பாளூர் அரசர்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலே, முத்தரைய மரபினரால் வெல்லப்பட்டுப் பெருமை குன்றிவிட்டார்கள். ஆகவே, கொடும்பாளூர் அரசரில் சிறப்புடன் இருந்த பூதிவிக்ரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலே இருந்திருக்க முடியாது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அல்லது கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பூதிவிக்ரமகேசரி இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது தவறாகாது.

ஹீராஸ் பாதிரியாரும், ஆரோக்கியசாமியும் இக்கருத்தைக் காண்டிருப்பதும் கருதத்தக்கது. எழுத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மூவர் கோயில் சாசனம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. எழுத்துக்களைப் பற்றிய ஆராய்ச்சி, நமது நாட்டைப் பொருத்தவரையில், இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆகவே எழுத்துக்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு காலத்தை ஆராய்வது சிறந்ததாகாது. சாசனத்தில் கூறப்பட்ட மற்ற விஷயங் களையும் நோக்க வேண்டும். இந்தச் சாசனம் முதலும் கடைசியும் இல்லாதபடியினாலே இது மூல சாசனம் என்று எப்படிக் கருதக்கூடும்?

மூல சாசனத்திலிருந்து பிற்காலத்தில் எழுதப்பட்டபடியாக இருக்கக்கூடும் அல்லவா?

எனவே, மூவர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிற கொடும் பாளூர் அரசராகிய பரதுர்க்கமர்த்தனனும் (வாதாபிஜித்), அவன் மகன் சமராபிரானும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பதும் பல்லவ அரசன் சார்பாகச் சளுக்கியருடன் போர் செய்து வாதாபி நகரத்தை வென்றவர் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் விளங்குகின்றது.