பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழிப்பாம்பு*

கோழிப்பாம்பு அல்லது குக்குடசர்ப்பம் என்பதைப் பற்றி நூல்களில் படிக்கிறோம். சீவக சிந்தாமணி, மேருமந்தர புராணம் முதலிய நூல்களிலே கோழிப்பாம்பு கூறப்படுகிறது.

சீவகன் பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டரசன் மகள் பதுமையைக் கோழிப்பாம்பு தீண்ட, அதன் நஞ்சினைச் சீவகன் தீர்த்து அவளை மணம் செய்து கொண்டான் என்று சீவகசிந்தாமணி கூறுகிறது.

'அரி குரல் கோழிநாமத்தரவு அவட்கடித்த தாகத்

திருவிழை யவளைத் தீர்த்தேன். தீர்விலா நண்பு வேண்டிப் பொருகளி யானை மன்னன் புனையிழை யவளைத் தந்தான் இருமதி கழிந்த பின்றை இடையிராப் பொழுதிற் போந்தேன்” இச் செய்யுளில் கோழிநாமத்தரவு என்பதற்கு, குக்குடசர்ப்பம் என்று உரையாசிரியர் நச்சினார்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

மேருமந்தா புராணம் என்னும் நூலிலும் கோழிப்பாம்பு கூறப்படு கிறது. பூதி என்னும் இயற் பெயரையும் சத்திய கோஷன் என்னும் சிறப்புப் பெயரையும் உடைய அமைச்சன், பொருட் செல்வத்தில் பேராசையுடையவனாய் அதனோடு செற்றமும் பகையும் கொண்டிருந்தபடியினாலே, அவன் பிற் பிறப்புகளில் மலைப் பாம்பாகவும், சமரீ என்னும் விலங்காகவும் பின்னர்க் கோழிப் பாம்பாகவும் பிறந்தான் என்று அப் புராணம் கூறுகிறது.

"பற்றினால் பூதி பாம்பாய்ச் சமரமாய்க் கோழிப்பாம்பாய்ச் செற்றத்தால் தீயில் வெம்பு நரகத்தைச் செறிந்து நின்றான்." (நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம்.)

  • செந்தமிழ்ச் செல்வி 24.11.1950