பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கலைஞராகவும் நூலாசிரியராகவும் விளங்கினார். இவரும் இவருடைய தந்தையாரான மாந்தாதாவும் மாமல்ல புரத்தில் சிற்பங்களை யமைத்த சிற்பாசாரியர்களின் பரம்பரையினர் போலத் தெரிகின்றனர்.

இவர் காலத்தில் காஞ்சிபுரத்தில் தண்டி என்று பெயர் உள்ள பேர் போன வடமொழிப் புலவர் இருந்தார். தண்டியாசிரியர், காவியதரிசம், அவந்திசுந்தரி கதை என்னும் நூல்களை எழுதிப் புகழ் படைத்தவர். இவரும் லலிதாலயரும் நண்பர்களாக இருந்தார்கள்.

சிற்பக் கலைஞரான லலிதாலயர், மாமல்லபுரத்திலே அனந்த சயனமூர்த்தி என்னும் சிற்ப உருவத்தைக் கல்லில் செதுக்கிய மைத்தார். அதைச் செதுக்கும்போது அவ்வுருவத்தின் கைகளில் ஒன்று உடைந்து போயிற்றாம். லலிதாலயர், உடைந்து போன அந்தக் கையை அந்த உருவத்திலேயே பொருத்தி வைத்து, உடைந்த அடையாளத்தை ஒருவரும் கண்டுபிடிக்க முடியாதபடி அமைத்து விட்டாராம்.

ஒரு சமயம், பல்லவ அரசனின் சேனைத் தலைவனின் மகனான ரணமல்லன் என்னும் பெயருள்ள வீரபாதகன், கேரள நாட்டிலிருந்து மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பார்க்க வந்திருந்த மாத்ருதத்தன், தேவ சர்மன் என்னும் நண்பர்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தபோது, அந் நகரத்தில் இருந்த லலிதாலயர், தண்டி யாசிரியரையும் கேரள நண்பர் களையும் வீரபாதகன் அழைத்துக் கொண்டு மாமல்லபுரஞ் சென்றான். மாமல்லபுரத்தில், லலிதாலயர் தாம் கல்லில் செதுக்கியமைத்த அனந்த சயனமூர்த்தியை அவர்களுக்குக் காட்டி, அதில் உடைந்த கை ஒட்டி யிருக்கும் இடத்தைக் காட்டும் படி கேட்டாராம். அவர்களால் கண்டு பிடிக்க முடியாமற்போகவே லலிதாலயரே அக்கையை அவர்களுக்குக் காட்டினாராம். அவ்வளவு திறமையாக, ஒருவரும் கண்டுபிடிக்க முடியாதபடி அந்தக் கை ஒட்டப்பட்டிருந்தது.

தண்டியாசிரியருக்கு அவந்திசுந்தரி கதை எழுத வேண்டும் என்ற கருத்துத் தோன்றியது மாமல்லபுரத்தைப் பார்த்தபிறகுதான் என்று கூறப்படுகிறது.

சிற்பக் கலைஞரான லலிதாலயர் தமிழில் எழுதிய சூத்ரக சரிதம் என்னும் நூல் மறைந்துவிட்டது. அந்நூலைப் பற்றிய செய்திகளும் தெரியவில்லை.