பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

முடிநிலை மூவர் இடுநில வாட்சியின்

அரசுமேம் பட்ட குறுநிலக் குடுமிகள்

பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த

பன்னிரு திசையில் சொன்னய முடையவும்'

என்பது அகத்தியச் சூத்திரம்.

இவ்வாறு இவர்கள் மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம், துளுவம், குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள், கடைச்சங்க காலத்தில், அதாவது, கி.பி. 300-க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும், தமிழ் மொழி வழங்கிய டங்களாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ் மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில்; கி.பி. 300-க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே, இந்நிலங் களைத் தமிழ் திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால். இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர், கடைச்சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல்வேண்டும்: அல்லது, அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த புலவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும்.

மேலும் மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில், பல்லவம் என்னும் நாடு தமிழ் திரிந்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவ நாடு'; அதாவது, பல்லவ அரசர்கள் அரசாண்ட நாடு. அது தொண்டைநாடு என்றும், தொண்டை மண்டலம் என்றும், அருவா நாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம், பல்லவ நாட்டை (தொண்டை நாட்டைத் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. சிங்களம், கொங்கணம், துளுவம், குடகம் முதலிய நாடுகளைப்போன்று பல்லவ நாடு (தொண்டைமண்டலம்) தமிழ் திரிந்து மொழி வேறுபட்ட நிலமா? அல்லவே! தமிழ் நாடாகிய தொண்டைமண்டலத்தையும் (கொங்கணம், துளுவம், குடகம் முதலியவை போன்று) தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இவற்றையெல்லாம் ஆராயும் போது, இந்த “அகத்தியச் சூத்திரம்” போலி அகத்தியச் சூத்திரம் என்று கருத வேண்டியிருக்கிறது.

இவ்வாறு அகத்தியரைப் பற்றியும், அகத்தியத்தைப் பற்றியும் ஆராயும்போது பலப்பல சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாகச் செல்லலாம். அகத்தியம் என்னும்