பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இரத்தினபுரத்து அரசன் பிரஜாபதி: அரசி குணகாந்தை. இவர்களுக்கு சந்திரசூளன் என்னும் மகன் பிறந்தான். பிரஜாபதி அரசனுடைய அமைச்சன் நரபதி என்பவனுக்கு விஜயன் என்னும் மகன் பிறந்தான். அரச குமாரனாகிய சந்திரசூளனும் மந்திரி மகனாகிய விஜயனும் ஒருங்கே வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்தார்கள்.

அப்போது, அந்நகரத்து வணிகனாகிய கௌதமன் என்பவன் தன் மகனான ஸ்ரீதத்தனுக்கு, குபேரதத்தன் என்னும் வணிகன் மகளாகிய குபேரதத்தையை மணஞ் செய்வித்தான். சந்திரசூளனும் அமைச்சன் மகன் விஜயனும் திருமண வீட்டில் புகுந்து, மணமகளாகிய குபேரதத்தையைக் கவர்ந்து கொண்டு, அரண்மனைக்குக் கொண்டு போய்விட்டார்கள். உடனே மணமக்களின் சுற்றத்தார்களும் நகர மக்களும் அரசனிடம் சென்று அரசகுமாரன் செயலைக் கூறி முறை யிட்டார்கள். அரசன் தன் மகனை மிகவும் சினந்து, அவனையும் அவனுக்குத் துணையாயிருந்த அமைச்சன் மகனையும் காட்டிற்குக் கொண்டுபோய்க் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். அங்கிருந்தவர், 'இச்சிறுவர்களுக்கு இக்கொடிய தண்டனை விதிப்பது தகாது; தண்டனையைக் குறைக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டும் அரசன் இணங்காமல் கொலைத் தண்டனையே விதித்தான்.

அமைச்சன், அரசனை வணங்கி, 'இந்தத் தண்டனையை நானே நிறைவேற்றுவேன்' என்று கூறி விடைபெற்றுக் கொண்டு. குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குப் போனான். காட்டிற்குப் போய், குமாரர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு மரணம் உறுதி” என்று கூறினான். குமாரர்கள், 'மரணத்துக்கு நாங்கள் அஞ்சவில்லை' என்று கூறினார்கள். அப்போது, அங்கிருந்த மலையின் மேலே மகாபலர் என்னும் முனிவர் தவம் செய்வதைக் கண்டு, அமைச்சன் குமாரர்களை அவரிடம் அழைத்துப் போனான். அந்த முனிவர், குமாரர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்து, 'இவர்கள் நல்ல புண்ணியம் செய்து பிற் பிறப்பிலே இராமர் இலக்குமணர் என்னும் பெயருள்ள பலதேவ வசுதேவர்களாகப் பிறப்பார்கள்” என்று நிமித்தம் கூறினார்.

அமைச்சன், குமாரர்களை முனிவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தான். முனிவர் அவர்களுக்குத் துறவு கொடுத்துத் தவம் செய்யச் சொன்னார். சிறுவர்கள் தவம் செய்து காலாந்தரத்தில் தேவலோகத்தில் தேவர்களாகப் பிறந்தார்கள். பின்னர் அத்தேவர்கள் தசரத மகா