பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார இதழ், திங்கள் இதழ் முதலியன

அச்சியந்திரங்கள் ஏற்பட்ட பிறகுதான் எல்லா நாடுகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. நமது நாட்டிலே அச்சியந்திரம் அதிகமாக ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றின. பத்தொன்பதாம் நூற்றாண் டுக்கு முன்னர் பத்திரிகைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரிய வில்லை. முதன் முதலாகத் தமிழில் வார இதழ் திங்கள் முதலிய பத்திரி கைகளை வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்களே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை ஐரோப்பியப் பாதிரிமார்களுக்கும் அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது. மற்றச் சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லாமலிருந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்கள் அச்சுக்கூடங்களை வைத்திருந்தபடியினாலும், ஐரோப்பிய நாடுகளில் வார, மாத இதழ்கள் வெளிவருவதைக் கண்டவர்களானபடியினாலும் அவர்கள் தமிழில் முதன் முதலாகத் தமிழ் இதழ்களை வெளியிட் டார்கள். அவர்கள் கிறிஸ்துவரானபடியினால் அவர்களின் வெளியீடு கள் எல்லாம் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன. சுதேசி களுக்கும் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகு. இந்துக் களும் முஸ்லிம்களும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள்.

பொதுவாகப் பத்திரிகைகள் நெடுங்காலம் தொடர்ந்து நடை பெறுவது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிச் சிலகாலம் நடந்து பின்னர் மறைந்துபோன தமிழ்ப் பத்திரிகைகள் பல. சென்ற நூற்றாண்டில் என்னென்ன பத்திரிகைகள் வெளிவந்தன என்பதைத் திட்டமாகக் கூறமுடியாது. என்னால் இயன்றளவு முயன்று தேடிப் பார்த்ததில் எனக்குச் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அப்பட்டியலைக் கீழே தருகிறேன்.