பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

199

முன்சீபாக அலுவல் செய்தார். 1882-இல் அவ்வலுவலை விட்டு, சென்னையில் வழக்கறிஞராக இருந்தார். “லா ஜர்னல்” என்னும் பத்திரிகையை நடத்தினார். தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்த படியால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் இவரைப் பி.ஏ. தமிழ்ப் பரீட்சை சோதகராக நியமித்தனர்.

1885-இல் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில், ஆங்கில வாக்காளர்களுக்கு இந்திய விஷயங்களைப் பற்றிப் பேசித் தெரிவிக்க இந்தியாவிலிருந்து மூன்றுபேர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவராகச் சேலம் இராமசாமி முதலியார் சென்று வந்தார். 1888-இல் அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குத் தலைமை தாங்கும்படி கேட்டார்கள். இவர் மறுத்து விட்டார்.

சேலம் இராமசாமி முதலியார் ஜில்லா முன்சீப் அலுவல் செய்தபோது, 1880-ஆம் ஆண்டு கும்கோணத்துக்கு மாற்றப்பட்டார். முதலியார் அவர்களின் தமிழ்ப் புலமையைக் கேள்விப்பட்டிருந்த உ.வே. சாமிநாதையர். இவர் வீட்டுக்குச் சென்று இவரைக் கண்டார். ஐயர் இவரைக் கண்டது நன்மையாக முடிந்தது. அக்காலத்தில் ஐயர் அவர்களுக்குச் சிறு பிரபந்த நூல்களைப்பற்றித் தெரியுமே தவிர சங்க நூல்களைப் பற்றியும் பெருங்காப்பியங்களைப் பற்றியும் தெரியாது. முதலியாரைச் சந்தித்த ஐயர் முதன் முதலாக அவரிடமிருந்து சங்க நூல்களைப் பற்றி அறிந்து சொண்டார். முதலியார் சங்க நூல்களைப் பற்றி ஐயரவர்களுக்குத் தெரிவித்தது அல்லாமல் தம்மிடமிருந்த சிந்தாமணி, மணிமேகலை காவியங்களின் ஏட்டுச் சுவடிகளையும் கொடுத்துப் படிக்கச் செய்தார். அல்லாமலும், சங்கநூல்களை ஆராயும் படியும் தூண்டினார், இவ்வாறு டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களைச் சங்கநூல்களை அச்சிடும்படித் தூண்டியவர் இராமசாமி முதலியார் அவர்களே,

இதுபற்றி ஐயர் அவர்கள் தாம் இயற்றிய “சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்" என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார். “1880- ஆம் வருஷத்திற் கும்பகோணத்தில் டிஸ்ட்டிரிக்ட் முன்சீபாக இருந்தவரும் கல்வி யறிவொழுக்கங்களாற் சிறந்தவருமான சேலம் ஸ்ரீமான் இராமசாமி முதலியாரவர்கள், கம்பராமாயணம் முதலிய பிற்காலத்து நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்து இன்புறுவதைக் காட்டிலும் வழங்காமலே இருக்கும் சீவக சிந்தாமணி முதலிய