பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சுண்முகக் கவிராயர், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலியோர் இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் அளித்திருக்கிறார்கள். சாமுவேல் பிள்ளை வேறு நூல்களையும் எழுதியிருக்கிறார்.

சிவக்கொழுந்து தேசிகர்

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள கொட்டையூர் இவருடைய ஊர். கொட்டையூருக்குக் கோடீச்சுரம் என்னும் பெயரும் உண்டு. இவர் சிறந்த புலவர். தஞ்சாவூரை அரசாண்ட மகாராட்டிர மன்னர் மரபினரான சரபோஜி அரசரின் (கி.பி. 1798-1832) அவைப் புலவராக இருந்தார். அக்காலத்தில் சரபேந்திர வைத்திய முறைகள், சரபேந்திரர் வைத்தியம், சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள் என்னும் வைத்திய நூல்களை எழுதினார். சன்னிரோக சிகிச்சைகள் என்னும் நூல் 1826- இல் இயற்றப்பட்டது.

அக்காலத்தில் அரசாண்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி யார் சென்னையில் கல்விச் சங்கம் ஒன்றை நிறுவியிருந்தார்கள், அதில் தமிழ்த் தலைமைப் புலவராக இருந்தவர் தாண்டவராய முதலியார். அச் சங்கத்துக்கு மற்றொரு புலவர் வேண்டியிருந்தமையால், அரசாங் கத்தார் சரபோஜி மன்னருக்குக் கடிதம் எழுதிச் சிவக்கொழுந்து தேசிகரை அனுப்பும்படிக் கேட்டனர். அவ்வாறே மன்னர் அனுப்பி வைத்தபோது சிவக்கொழுந்து தேசிகர் சென்னைக்கு வந்து சங்கத்தின் புலவராக இருந்தார்.

தாண்டவராய முதலியார், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், விசாகப் பெருமாளையர், இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயர் அனந்தபாரதி ஐயங்கார் முதலியோர் இவர் காலத்துப் புலவர்.

திருத்தணிகை விசாகப் பெருமாளையரும் சிவக்கொழுந்து தேசிகரும் சேர்ந்து 1857-ஆம் ஆண்டில் திருவாசகத்தை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிற் பதிப்பித்தார்கள். இதுவே முதன்முதல் அச்சிடப்பட்ட திருவாசகம் போலும்.

சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்கள். திருவிடை மருதூர்ப் புராணம், ஆச்சாபுரத் தல புராணம், கோட்டீசுவரக் கோவை, பெருவுடையாருலா, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம், கோட்டீசுவர உலா, கோட்டீசுவர உலா இப்போது கிடைக்கவில்லை. சிவக்கொழுந்து தேசிகர் 90 ஆண்டு வாழ்ந்திருந்தார்.