பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

271

போர்ட்டு மெம்பராகவும் விளங்கும் ஸ்ரீ அ. மீ. மலையையாப் பிள்ளையவர்கள். இதுகாறும் இந்நூலின் பெயரும், இந்நூல் கீழ்க்கணக்குப் பதினெட்டில் ஒன்றென்பதும் தெரியாதிருந்த நம் தமிழ் நாட்டார்க்கு இந்நூலை அளிப்பதற்குக் காரண கர்த்தர்களாயிருந்த இவ்விருவர்களுக்கும் தமிழுலகம் நன்றி பாராட்டக்கடன் பட்டுள்ளது.

இன்னிலை நூலாசிரியரைப் பற்றிக் கூறுகிற இடத்தில் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமாகிய வ.உ. சிதம்பரம் பிள்ளை யவர்கள் இவ்வாறு எழுதுகிறார். “இந்நூலைத் தொகுத்தவர் மதுரை யாசிரியர் என்று இந்நூலின் ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டில் எழுதப் பட்டிருக்கிறதென்று மேலே கூறியுள்ளேன். அஃதாவது, இந்நூலைக் கீழ்க்கணக்குப் பதினெட்டில் ஒன்றாகத் தொகுத்தவர் மதுரை யாசிரியர் என்று கொள்க. 'மதுரையாசிரியர்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்று விளங்கியவர் மாறனார் என்பவரும் நல்லந்துவனார் என்பவருமே. இவ்விருவரும் கடைச் சங்கப் புலவர்கள். இவர்களில் எவர் இந்நூலைத் தொகுத்தவரென்பது தெரியவில்லை. இந்நூற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவர். இவர் எட்டுத் தொகை நூல்களில் சிலவற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியதுபோல இந்நூற்கும் பாடியுள்ளார். இவரும் கடைச்சங்கப் புலவர்"

இவர் கூறியுள்ளதை வரலாற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால், இன்னிலை நூல் ஒருபோலி நூல் என்பதும், அது கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது அன்று என்பதும் பட்டப்பகல் போல் விளங்குகின்றன.

கீழ்க்கணக்கு நூலைப் பதினெட்டாகத் தொகுத்தவர்யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அதுபற்றிக் கர்ணபரம்பரையாகவோ நூல்மூலமாகவோ யாதொரு செய்தியும் கிடையாது. ஆனால், கடைச்சங்கப் புலவரான மதுரையாசிரியர் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்ததாக இன்னிலைப் பதிப்பாசிரியர் கூறுகிறார். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் கடைச்சங்க காலத்துக்கு முன்பு இயற்றப் பட்டவை அல்ல. கி.பி. முதல் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டவை கீழ்க்கணக்கு நூல்கள். நாலடி நானூறு கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. முப்பால் என்னும் திருக்குறள் கி.மு. முதல் நூற்றாண்டில் அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.