பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமுறையில் தமிழ்க் கல்வி

கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியக் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் நமது நாட்டுக்கு வந்து கிறிஸ்து மதத்தைப் பரப்பு வதற்காகப் பெரிதும் பாடுபட்டார்கள். அவ்வாறு செய்த முயற்சியில் அவர்களால் கிறிஸ்துவர்களாகப்பட்ட மக்களின் கல்வியைப் பற்றியும் அவர்கள் கருத்துச் செலுத்திப் பாடசாலைகளை நிறுவினார்கள். அவர்களின் முயற்சி 19-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்து விளங்கியது. காரணம் என்னவென்றால், அந்த நூற்றாண்டில் ஆங்கிலேய அரசாங்கம் ஏற்பட்டு நாட்டிலே அமைதியும் ஒழுங்கு முறையும் பாதுகாப்பும் நிலவியதுதான். 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிலையான ஆட்சி இல்லாமல் அமைதியும் பாதுகாப்பும் இல்லாமல், கொள்ளையும் கூச்சலும் கலகமும் குழப்பமும் சண்டையும் போரும் விளைந்து நாட்டிலே மக்களுக்குத் துன்பங்கள் விளைந்தன.

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகு நாட்டிலே அமைதியும் பாதுகாப்பும் நிலைபெற்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாதிரிமாரும் மிஷனரிமாரும், கிறிஸ்து மதத்தைப் பரவச் செய்யும் கருத்தோடு, கல்வி வளர்ச்சியையும் செய்துவந்தனர். அதன் காரணமாகத் தமிழ்க் கல்வித்துறையில் சில புதிய மாறுதல்களும் உண்டாயின.

கிறிஸ்துவப் பாதிரிமார் சில நூற்றாண்டுகளாகச் செய்து வந்த பிரசாரத்தின் பலனாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருந்தொகையான தமிழர் கிறிஸ்து சமயத்தைச் சார்ந்திருந்தனர். தமிழக் கிறிஸ்துவ சமூகத்தின் கல்விக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதிரிமாரும் மிஷனரிமாரும் செய்த தொண்டுகள் பாராட்டத் தக்கன. கிறிஸ்து மதத்தை அழுத்தமாக ஊன்றச்செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய அடிப்படையான நோக்கமாக இருந்த போதிலும், அவர்கள் செய்த கல்வித் தொண்டுகளின் மூலமாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கம் ஏற்பட்டதை மறக்கவும் முடியாது, மறைக்கவும்

முடியாது.