பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயக் காழ்ப்பு

u

தமிழ்க் கல்வியில் உயர்நிலை யடைந்த மாணவர்களும் வித்துவான்களும் புலவர்களும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்கநூல்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை பெருங்கதை முதலிய சங்ககாலத்து நூல்களையும், சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு, சீவக சிந்தாமணி, சூளாமணி முதலிய நூல்களையும் பயில்வது தொன்று தொட்டு வந்த வழக்கமாகும். ஆனால் இந்த வழக்கம் 18-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து தடைப்பட்டது. மேற்சொன்ன நூல்களைப் படிக்கக் கூடாதென்று புதிய கருத்து ஒன்று அக்காலத்தில் தோன்றியது.

சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும் வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். சைவ சமயத்தவர் இந்த நூல்களைப் படிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டனர். சமயப் பற்றுக் காரணமாக உண்டான இந்தப் புதிய கருத்து தமிழரின் கலைகளுக்கும் பண்பாட்டுக்கும் பேராபத்தாக இருந்தது. தமிழ் மொழிக்கே ஆபத்தாக இருந்தது.

சங்க நூல்களைப் படிக்கக்கூடாதென்ற இயக்கம் நீடித்திருந்து அச்சுப் புத்தகங்களும் அக்காலத்தில் வெளிவராமலிருந்திருக்கு மானால், முன்னரே மறைந்து போன நூல்கள் போக இப்போது கிடைத்துள்ள பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய இலக்கியச் செல்வங்களும் மறைந்துபோய், தமிழன் பழைய கலைகளும் பழைய இலக்கியங்களும் இல்லாத வறியவனாக ஆகியிருப்பான். நற்காலமாக அந்தக் குறுகிய நோக்கமுள்ள தவறான கருத்து சென்ற நூற்றாண்டிலேயே தடுக்கப்பட்டு விட்டது. அதனால் நேர்ந்திருக்கக் கூடிய பேராபத்து நீக்கப்பட்டது.