பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

Լ

79

செய்யுங்களைச் சிலர் எடுத்துப் போட்டு அந்த இடத்தில் விநாயகர் வணக்கப் பாடல் அமைத்துச் அச்சிட்டனர். நிகண்டுகளில் அருகப் பெருமானுக்குக் கூறப்பட்ட செய்யுள்களை மாற்றிவிட்டனர். இவ்வாறு சமயப் பற்றுக் காரணமாகச் சிலர் அச்சுப் புத்தகங்களை அச்சிட்டபோது மாற்றினார்கள்.

தம்மிடம் பாடம் கேட்க வரும் மாணவர் வேறு மதத்தவராக இருந்தால் அவர்களின் பெயரை மாற்றிவைத்துப் பாடம் சொல்லி யவர்களும் உண்டு. வெங்கடராமன் என்னும் பெயர் கொண்டிருந் தவரை மாணவராக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ‘சாமிநாதன்' என்று புதுப் பெயரைச் சூட்டினார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். அந்தப் பெயருடன் விளங்கியவர்தான் டாக்டர் உ.வே. சாமிநாதையர்.

சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் வாழ்ந்து வந்த உரையாசிரியர் வித்துவான் இராசகோபாலப்பிள்ளை என்னும் வைணவரிடம் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை யவர்கள். இளையராக இருந்த காலத்தில், கம்பராமாயணம் பாடம் கேட்கச் சென்றபோது, நெற்றியில் நீறுபூசிக் சண்முகம் என்னும் பெயர் தாங்கியிருந்ததன் காரணத்தினால், கொடிய வைணவரான இராசகோபாலப்பிள்ளை அவருக்குப் பாடம் சொல்ல மறுத்து விட்டாராம். பிறகு. நெற்றியில் திருமண் அணிந்து சண்முகம் என்னும் பெயரை மாற்றி இராமாநுசன் என்று வைத்துக்கொண்டால் இராமாயணம் பாடம் சொல்ல இயலும் என்று கூறினாராம். அதன் படியே (அப்பாடம் முடிகிறவரையில்) செய்து கொண்டு சண்முகம் பிள்ளையவர்கள் பாடங்கேட்டார் என்னும் செய்தி, அக்காலத்தில் சமயக் காழ்ப்பு எவ்வளவு பலமாக இருந்தது என்பதை விளக்குகின்றது.

சமயக் காழ்ப்பு தமிழ் இலக்கியங்கள் சில மறைதற்குக் காரணமாக இருந்தன என்பது மேற்கூறிய வற்றால் விளங்கும்.