பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உரைநடை நூல் வரன்முறை

ஐரோப்பியர் வருவதற்கு முன்னே தமிழ்மொழியில் தனி உரைநடைநூல் இருந்ததில்லை. இலக்கணம், இலக்கியம், நிகண்டு, சோதிடம், மருத்துவம் முதலிய எல்லா நூல்களும் செய்யுளிலே இயற்றப்பட்டு வந்தன. இவைகளுக்கு உரையாசிரியர்கள் இயற்றிய உரைகளைத் தவிர தனிப்பட்ட உரைநடைநூல் ஒன்றேனும் இருந்ததில்லை. ஆனால், பண்டைக் காலத்தில் உரைநடையும் செய்யுளுமாகக் கலந்து நூல்கள் இயற்றப்பட்டன என்பதை,

“தொன்மை தானே,

உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே’

என்னும் தொல்காப்பியச் செய்யுளில் 238-வது சூத்திரத்தால் அறியலாம். அவற்றை "உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பர். பெருந்தேவனார் பாரதமும், தகடூர்யாத்திரையும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கு உதாரணங்களாகும். ஆனால், அவ்விரு நூல்களும் இறந்துபட்டன. இப்போது, உரைநடையும் செய்யுளுமாகக் கலந்து இயற்றப்பட்ட நூலுக்கு எடுத்துக் காட்டப்படுவது சிலப்பதிகாரம் ஒன்றே. சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பதை,

66

'உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைகா லடிகள் அருள மதுரைக்

கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்

என்னும் சிலப்பதிகாரப் பதிகச் செய்யுளடிகளால் அறியலாம். சிலப்பதிகாரம் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறப்பட்ட போதிலும், அந்நூலில் மிகச் சிறு பகுதி மட்டுந் தான் (உரைபெறு கட்டுரையும் வாழ்த்துக் காதையின் உரைப்பாட்டு மடையும்) உரைநடை; மற்றப் பெரும் பகுதிகள் பாட்டே. எனவே, உரையும் பாட்டுமாகக் கலந்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிற சிலப்பதிகாரத்தில், அரைக்காற் பகுதிகூட உரைநடை அமைந்தி