பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

உரைபெருகு மென்பதைக் கருதி எனக் கொள்க,” என எழுதி, மற்ற அடிகளுக்கு உரையைச் சுருக்கிக் கொண்டதும் இங்கு நோக்கத் தக்கது. உரை எழுதுவதற்கென்றே முற்பட்டவர், பின் உரை பெருகு மென்று கருதிச் சுருக்கிக் கொண்டது, சுலபமாக எழுதுவதற்கு ஏற்ற கருவிகள் அக்காலத்து இல்லாமையா லென்க. இக்காலத்துள்ளது போன்ற வசதியான எழுதுகருவிகள் அக்காலத்து இருந்திருந்தால் இவ்வாறு உரையைச் சுருக்கிக் கொண்டிருக்க மாட்டாரன்றோ? ஆகவே, பண்டைத்தமிழர் உரைநடை நூல் இயற்றாதது அக் காலத்தில் வசதியான எழுதுகருவிகளும் அச்சு யந்திரமும் இல்லாத காரணம் பற்றியே என்பது விளங்குகிறது.

பண்டை நாளில் தமிழ்மொழியில் உரைநடை நூல்கள் இருந்திருக்குமானால், தமிழ்நாடு பல துறைகளிலும் இன்னும் முன்னேற்றமடைந்திருக்கும், ஏனென்றால், ஒரு நாடு முன்னேற்ற மடைய வேண்டுமானால், அந்நாட்டில் உரைநடை நூல்கள் உண்டாக வேண்டும். மேல் நாடுகளில் நெடு நாட்களுக்கு முன்பே உரைநடை நூல்கள் ஏற்பட்டிருந்தபடியால், அந்நாட்டு மக்கள் பல செய்திகளையும் எளிதில் உணர்ந்து, விரைவில் முன்னேற்றமடைய முடிந்தது. இக் கருத்தையே நீதிபதியும் சிறந்த தமிழ்க் கவியுமாயிருந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள்,

“வசன காவியங்களால் மக்கள் திருந்த வேண்டுமேயல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அன்றோ? ஐரோப்பிய மொழிகளில் வசன காவியங்கள் இல்லாம லிருக்கு மானால், அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந் திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய தாய்மொழியில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில், இந்தத்தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்."

என்று தாம் எழுதிய 'பிரதாப முதலியார்' சரித்திரத்தில் எழுதி யிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் பெரும் புலவராய் விளங்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர் என்னும் வீரசைவர் தாம் எழுதிய ‘பால போத இலக்கணம்' என்னும் நூலின் பாயிரத்தில், உரைநடை நூல்களின் இன்றியமையாமையைப் பற்றிக் கீழ் வருமாறு எழுதுகிறார்: