பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

உரைநடை வீரமாமுனிவரின் உரை நடையைப் போன்று மிகச்சிறந்து விளங்குகிறது. செர்மனி தேசத்தவரான சீகன் பால்கு ஐயர் எழுதிய உரைநடை பொதுமக்களுக்கு ஏற்ற கொச்சைத்தமிழ்நடையில் அமைந்தது. வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர் இவர்களின் வரலாற்றினை மற்றோர் இடத்திற் காண்க.

தமிழ்உரைநடைநூல் முதல்முதல் தோன்றியது 16-ஆம் நூற்றாண்டில் என்றாலும், அது வேரூன்றி நிலை பெற்று வளரத் தொடங்கியது சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே தான். 17,18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் உரை நடை நூல்கள் அதிகமாக ஏற்பட வில்லை. 1577-இல் முதல் உரைநடை நூல் உண்டானதற்குப் பிறகு, இருநூறு ஆண்டுகள் வரையிலும், தமிழ் உரைநடை வளர்ச்சி பெறாமலே குன்றியிருந்தது. சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே தான் தமிழ் உரைநடை நூல்கள் ஏராளமாக வெளிப்படத் தொடங்கின. இது வியப்புத்தான். இருநூறு ஆண்டுகளாக உரைநடை வளர்ச்சி தடைப்பட்டிருந்து, பிறகு திடீரென்று வளரத் தொடங்கியதென்றால், தடைப்பட்டிருந்ததற்கும், பிறகு திடீரென்று வளர்ந்ததற்கும் காரணமிருக்கவேண்டுமன்றோ? அக்காரணந்தான் யாது? காரணம் அரசியற் குழப்பங்களே. 16-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையில், நமது நாட்டு வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது நன்கு விளங்கும், பண்டைய தமிழ் மன்னரும் சிற்றரசரும் அரசாட்சி இழந்து, புதிய புதிய அரசர்களும் தலைவர்களும் இந்நாட்டில் தோன்றினர். பிறகு அவரும் அழிந்தொழிந்து, குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் அரசாண்டனர். இவர்கள் காலத்தில் வலியவன் மெலியவனை அடித்துப் பிடுங்குவது என்கிற முறை நாடெங்கும் நடைபெற்று வந்தது. பிரெஞ்சு, இங்கிலிஷ் கம்பெனிக்கார சண்டைகளும், கர்நாடக நவாப்புகளின் போர்களும், பாளையக்காரரின் தொல்லைகளும், மராட்டியரின் படையெடுப்பும், ஐதராலி திப்பு சுல்தான் கலகங்களும் ஆகிய அரசியற்குழப்பங்கள் ஏற்பட்டு, நாட்டுமக்களைப் படாதபாடு படுத்திவிட்டன. நிலை பெற்ற அரசாட்சியும், உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பும் இல்லா மையாலும், மேற்சொன்ன குழப்பங்களின் காரணத்தாலும், மக்கள் கல்வியிற் கருத்துச் செலுத்தினார்களில்லை. ஆனாலும், காரிருட்டில் மின்மினி தோன்றுவது போல், இந்தக் குழப்பக் காலத்திலும் சமயத் தொண்டாற்றி வந்த கிறித்துவப் பாதிரிகளும். சைவ மடாதிபதிகளுமே