பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

63

என்பதில் ஐயமில்லை. இதில் பல தமிழ்ப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அக்காலத்தில் அச்சிடுவதற்குக் காகிதம் ஐரோப்பாவிலிருந்து அதிகமாக வருவதில்லையாகையால், தரங்கம்பாடிச் சபையோர் ஒரு காகிதப் பட்டரை ஏற்படுத்திக் காகிதம் செய்தனர். ஆனால் உழைப்புக்குத் தகுந்த பயன் கிடைக்காதபடியால், அத்தொழில் சிறிது காலத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இதுவே இந்தியாவில் முதன் முதல் ஏற்பட்ட காகிதத் தொழிற்சாலை என்று தோன்றுகிறது. இந்தத் தரங்கம்பாடி அச்சுப் பொறி ஏற்பட்ட பிறகு பொதுமக்கள் அச்சுப் புத்தகங்களை வாங்கிப் படிக்க அதிகமாக முற்பட்டனர் என்பது தெரிகிறது.

1761-ம் ஆண்டில், இங்கிலீஷ்காரர் புதுச்சேரியைப் பிடித்தனர். அப்பொழுது ஆங்கிலேயர் பிரெஞ்சுக் கவர்னரின் அரண்மனையில் இருந்த ஓர் அச்சுப் பொறியைக் கைப்பற்றினர். கைப்பற்றிய அந்தப் பொறியைச் சென்னைக்குக் கொண்டுவந்து, வேப்பேரி என்னும் இடத்தில் இருந்த மிஷனரிமாரின் பார்வையில் விட்டுவைத்தனர். இது தமிழ் நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது அச்சுப் பொறியாகும். இதில் அரசாங்கத்தாருக்கு வேண்டிய புத்தகங்களும் மிஷனரி மாருக்கு வேண்டிய புத்தகங்களும் அச்சிடப்பட்டன. தரங்கம் பாடிச் சபையின் அச்சுக்கூடத்தினால் பொது மக்களுக்கு வேண்டிய அச்சுப் புத்தகங்கள் அவ்வளவையும் உண்டாக்க முடியாமலிருந்த குறை சென்னை அச்சுப் பொறி உண்டானபிறகு நீங்கிவிட்டது. தமிழ் நாட்டில் 18-ஆம் நூற்றாண்டில் இந்த இரண்டு அச்சுப் பொறிகள் தாம் இருந்தன.

ம்

ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் தான் அச்சுப் புத்தகங்கள் ஏராளமாகச் செய்யப்பட்டன. ஏனென்றால், மிஷனரிமார் தமிழ்நாட்டிற் பல இடங்களிற் சபைகளை ஏற்படுத்தி மும்முரமாக சமயத்தொண்டு செய்ய முற்பட்டார்கள். அன்றியும், முந்திய நூற்றாண்டுகளை விட இந்த நூற்றாண்டில் ஏராளமான பாடசாலைகளை ஏற்படுத்தினார்கள். இந்துக்களும் முகம்மதியருங்கூடத் தங்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகப் புத்தகங்களைப் புதியன புதியனவாக அச்சிட்டு வெளிப்படுத்தினதும் இந்த நூற்றாண்டிலே தான். அன்றியும், செய்திகளைக் கூறும் நாள்தாள், கிழமைத் தாள்களும் இந்த நூற்றாண்டிலே தான் ஏற்பட்டன. இஃதன்றியும், இந்தியர் அச்சுப் பொறி வைக்கக் கூடாதென்றிருந்த தடை 1835-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.