பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

115

கூறுவது இல்லை. மலையாளிகள் ஆற்றைப் புழ (புழை) என்று கூறுகின்றனர். கன்னட நாட்டார் ஆற்றைப் பழங் கன்னடத்தில் (ஹளெகன்னடம்) பொளெ என்றும், புதுக் கன்னடத்தில் (ஹொச கன்னடத்தில்) ஹொளெ என்றும் கூறுகின்றனர். புழ, பொளே, ஹொளெ என்னும் சொற்கள் புழை என்னும் சொல்லின் திரிபுகள்.

திராவிட இனத்தவராகிய தெலுங்கர் ஆறு என்னுஞ் சொல்லை ஏறு என்று கூறுகிறார்கள். ஏறு என்பது ஆறு என்பதன் திரிபு என்பதில் ஐயமில்லை.

ஆல் என்றால் நீர் என்பதைக் கண்டோம். ஆலிலிருந்து (நீரிலிருந்து) தோன்றியது ஆறு. ஆல் அறுத்துக்கொண்டு பாய்ந்த இடம் ஆல் அறு என்று கூறப்பட்டது போலும். ஆலறு என்னும் சொல் பிற்காலத்தில் ஆறு என்று திரிந்து வழங்கியதுபோலும். நீர் தாழ்ந்த இடத்தை நோக்கி ஓடும் இயல்புள்ளது. ஆகவே ஆல்(நீர்) அறுத்துச் சென்ற வழி ஆலறு என்று வழங்கப்பட்டது என்பதில் என்ன தடை? பிறகு, ஆலறு என்னுஞ் சொல் ஆறு என்று மருவியதில் என்ன ஐயம்? ஆறு என்னுஞ் சொல் இடுகுறிப்பெயர் என்று கருதிவந்தது தவறு என்பதும், அது ஆல்(நீர்) என்னும் சொல்லடி யாகப் பிறந்த காரணப் பெயர் என்பதும் தெளிவாகிறது. நிற்க.

மலைகளில் பாயும் சிற்றாற்றுக்கு அருவி என்பது பெயர். அருவிநீர் சில இடங்களில் உயரமான இடத்திலிருந்து மிகத் தாழ்வான இடத்தில் விழுகிறதும் உண்டு. இதற்கு இக்காலத்தில் நீர் வீழ்ச்சி என்று பெயர் கூறுகின்றனர். இது Water falls என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழி பெயர்ப்பு. சிலர் நீர்வீழ்ச்சியையும் அருவி என்று கூறுகின்றனர். அருவியும் நீர் வீழ்ச்சியும் வெவ்வேறானவை.

மலைப்பக்கத்தில் மலைப்பாறையிலிருந்து மிகவும் தாழ்வான இடத்தில் அருவி நீர் விழுகிற இடத்துக்குத் தெலுங்கு மொழியில் கோனை என்று பெயர் கூறுகிறார்கள். கோனை என்பது கொனை (குனை-முனை) என்பதின் திரிபு போலும். உயரமான மலைப் பாறையின் கோனையிலிருந்து விழுகிறபடியால் கொனை (கோனை) என்று பெயர் பெற்றது போலும்.

அடிக் குறிப்புகள்

1. இந்தக் கட்டுரை ‘கலைக்கதிர்’ என்னும் திங்கள் வெளியீட்டில் (மலர் 12-இதழ். 9, 1960) வெளிவந்தது.