பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகா புவ்வா

-

புகா என்னுஞ் சொல்லின் பொருள் உணவு என்பது. இந்தச் சொல் சங்ககால இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. பிற்கால இலக்கியங்களில் இச்சொல் வழங்கப்படவில்லை. ஆனால் பேச்சு வழக்கில் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே புகா என்னுஞ் சொல் சங்க காலம் முதல் இன்றளவும் வழங்கி வருகிற பழைய சொல்லாகும். ‘மரற் புகா அருந்திய மா எருத்து இரலை’

என்பது குறுந்தொகைச் செய்யுள் (223 : 3) அடி.

‘மலராகிய உணவை அருந்திய பெரிய பிடரிக் கழுத்தையுடைய ஆண்மான்' என்பது இதன் பொருள். இதில் மானின் உணவு புகா என்று கூறப்பட்டிருக்கிறது.

'புலி புகா உறுத்த புலவுநாறு கல்லளை’

என்பதும் குறுந்தொகைச் செய்யுள் (253 : 6) அடி.

'புலி தன் உணவைச் செலுத்திவைத்ததால் புலால் நாறும் மலைக்குகை,' என்பது இதன் பொருள். புலி தான் கொன்ற மிருகத்தின் தசையாகிய உணவைத் தின்று எஞ்சியதைப் பிறகு உண்பதற்காக மலைக்குகையில் இட்டு வைத்த உணவு என்பது இதன் கருத்து. இதில் புலியின் உணவு புகா என்று கூறப்பட்டது.

'அரியலம் புகவின் அந்தோட்டு வேட்டை' நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்’

என்பதும் குறுந்தொகை செய்யுள் (258:5-6) அடி

'கள்ளாகிய உணவையும், அழகிய விலங்குகளின் தொகுதியை வேட்டையாடுதலையும், பகைவருக்கு நரகம் போன்ற துன்பத்தைத் தருகின்ற விளங்கும், வாளையும் உடைய இளைய வீரர்கள்' என்பது இதன் பொருள். இதிலும், உணவாகிய கள் புகா என்று கூறப்பட்டது. இச்செய்யுளில் புகா என்பது, புகவு என்று விகாரப்பட்டது.