பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

'நெடுநீர் ஆம்பல் அடை’

-

- (குறும். 352 : 1)

அடை என்னுஞ்சொல் அடகு என்றும் கூறப்பட்டது. உதாரணம்:

'வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகு'

-(புறம். 140 : 3-4)

வளையணிந்த கையையுடைய விறலியர் மனைப் பக்கங்களில்

பறித்த இலை என்பது இதன் பொருளாகும்.

'அவிழ்பதம் மறந்து பாசடகு மிசைந்து'

-

- (புறம் 159 : 12)

அவிழாகிய உணவை மறந்து பசுமையான இலையைத் தின்று என்பது இதன் பொருள். இவற்றில் அடை என்னுஞ்சொல் அடகு என்று வழங்கப்பட்டமை காண்க.

இலைகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப்பட்ட அடை என்னுஞ் சொல் வெற்றிலைக்குச் சிறப்புப் பெயராகவும் வழங்கப்பட்டது. அடை (வெற்றிலை) அருந்தும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வெறும் வெற்றிலையை மட்டும் உண்பது வழக்கம் இல்லை. வெற்றிலை யாகிய அடையோடு, கமுகின் காயாகிய பாக்கையும் சேர்த்து உண்பது வழக்கமல்லவா? ஆகவே பாக்குக்கு அடைக்காய் என்று பெயர் உண்டாயிற்று. அடைக்காய் என்றால் அடையுடன் சேர்த்து உண்ணப் படும் காய் என்பது பொருள். கோவலன் உணவு கொண்ட பிறகு கண்ணகி வெற்றிலைப் பாக்குக் கொடுத்தாள் என்பதை ‘அம்மென் திரையலோடு அடைக்காய்’ கொடுத்தாள் என்று சிலப்பதிகாரம் (16– 55) கூறுகிறது. (திரையல் வெற்றிலைச் சுருள்.) இங்குப் பாக்கு அடைக்காய் என்று கூறப்பட்டது காண்க.

பாக்குக்கு அடைக்காய் என்னும் பெயர் தமிழ் மொழியில் மட்டும்தான் வழங்குகிறது என்று கருத வேண்டா. வேறு திராவிட இன மொழிகள் சிலவற்றிலும் அடைக்காய் என்னும் பெயர் வழங்குகிறது. கன்னட மொழியில் அட, அடகெ, அடிகெ என்னுஞ் சொற்கள் பாக்குக்குப் பெயராக வழங்குகின்றன. (பாக்கு மரத்துக்கும் இப்பெயர்கள் வழங்கப்படுகின்றன) குடமலை நாட்டுக் குடகு மொழியிலும் பாக்குக்கு அடகெ என்று பெயர் வழங்குகிறது. இச் சொற்கள் அடைக்காய் என்பதன் திரிபு என்பது சொல்லாமலே விளங்கும்.