பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

133

பேர்போன அஜந்தாக் குகைக் கோவில்களின் சுவர்களிலும் தூண்களிலும் எழுதப்பட்டுள்ள வண்ண ஓவியக் காட்சிகளில், அரசியரின் ஊழியப் பெண்களுடன் கூனியர், குறளர்களும் காட்டப்பட்டுள்ளனர். 17-ஆம் எண்ணுள்ள குகையில் காணப்படுகிற வண்ண ஓவியங்களில் ஒன்று, அரசகுமாரியின் ஒப்பனைக் காட்சியைக் காட்டுகிறது. கருநிறமுள்ள இந்த அரசகுமாரி தன் இடது கையில் கண்ணாடியைப் பிடித்துக்கொண்டு வலது கையின் பெருவிரல் சுட்டு விரல்களில் திலகம் இடுவதற்காகச் சாந்தைக் குழைக்கும் காட்சியும், அவளுக்கு வலது இடது புறங்களில் இரண்டு ஊழியப் பெண்கள் சாமரையும் தட்டும் ஏந்தி நிற்கும் காட்சியும் அரசகுமாரியின் எதிரிலே கூன் வளைந்த குள்ளமான இளமங்கை யொருத்தி அரசகுமாரியின் ஏவலை எதிர்பார்த்து நிற்கும் காட்சியும் இயற்கை எழிலுடன் எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவியப் படத்தில், அரண்மனை ஊழியர்களில் முதுகுக் கூன் உடைய கூனியர்களும் அமர்த்தப்பட்டிருந்த செய்தியைக் காண்கிறோம். அஜந்தாக் கோயில்களின் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்ட காலம் கி.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும்.

பழைய காலத்து ஓவியங்களிலிருந்தும் இலக்கியங்களி லிருந்தும் நாம் அறிந்துகொள்ளும் செய்தி, அக்காலத்து அரண்மனை ஊழியர்களில் கூனர், குறளர், பேடியர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பதே. (குறளர் மிகக் குள்ளமான உருவம் உடையவர்.) கூன் உடையவர் கூனர். ஆண்பால் கூனன். பெண்பால் கூனி. காலப்போக்கில் கூன் முதுகில்லாத ஊழியப் பெண்களும், (அவர்கள் கூன் இல்லாமல் அழகான உடல் அமைப்புள்ளவர்களாக இருந்தாலும்) கூனி என்று பெயர் பெற்றனர். ஆனால் ஆண்பால் ஊழியர்கள் கூனன் என்று பெயர்பெறவில்லை. ஏனென்றால் அரண்மனை அந்தப் புரங்களில் அரசியர் அரச குமாரிகளின் ஊழியர்களாக ஆண்பாற் ஆ கூனர் இடம் பெறவில்லை. பெண்பாற் கூனியர் மட்டுமே இடம் பெற்றிருந்தார்கள். ஆகவேதான், கூன் இல்லாத ஊழியப்பெண்களும் கூனியர் என்று பெயர் பெற்றார்கள் என்பது தெரிகிறது. கூனன் என்னும் ஆண்பாற் பெயர் ஊழியன் என்னும் பொருளைப் பெறாமலே இருந்துவிட்டது.

இவ்வாறு, கூனி என்னும் பொருட்பெயர் பிற்காலத்தில் கூனி என்று தொழிலைக் குறிக்கும் பெயராக வழங்கப்பட்டது. இக்காலத்தில் இப்பெயர் அடியோடு மறைந்துவிட்டது.