பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“மெய்” என்னும் சொல் ஆராய்ச்சி*

மெய் என்னும் சொல்லுக்கு உண்மை, உடம்பு என்னும் இரண்டு பொருள்கள் உண்டு. உடல், உடம்பு என்னும் பொருள் உள்ள மெய் என்னும் சொல்லைப் பற்றி இங்கு ஆராய்வோம். இச்சொல் இப் பொருளில் தமிழ் மொழியில் மட்டும் அல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட இன மொழிகளில் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. மெய் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய வேறு சில சொற்களும் வழங்கிவந்தன. இக்காலத்தில் இச்சொல் பேச்சுவழக்கில் பெரிதும் மறைந்துவிட்டது. பழைய இலக்கியங்களில் மட்டும் காணப்படுகிறது. இப்போது மெய் என்னும சொல் மறைந்து அதன் இடத்தில் உடல், உடம்பு என்னும் சொற்கள் வழங்கப்படுகின்றன.

அரசனுக்குத் தீங்கு நேராதபடி அவனைக் காவல் புரிந்த வீரர்களுக்கு மெய்க்காவலர் என்னும் பெயர் இருந்தது. மெய்யைக் (உடம்பை) காவல் புரிந்ததால் இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது. மலையாள மொழியிலும் மெய்க்காவல் என்னும் சொல் வழக்கில் உண்டு. கன்னட மொழியில் மைகாவலு என்று வழங்குகிறது. மை என்பது மெய் என்பதன் திரிபு.

தன்னைத்தானே மறந்திருக்கும் நிலையைத் தமிழில் மெய்ம் மறத்தல் என்று கூறுவர். மலையாளிகள் மெய்மறக்குக என்று மொழிவர். கன்னட மொழியினர் மைமறெ என்று வழங்குகின்றனர்.

மெய் என்னும் சொல் மலையாள மொழியில் மெயி, மை, மே என்று திரிந்து வழங்குவது உண்டு. மெய் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய சில சொற்கள் மலையாளத்தில் வழங்குகின்றன. அவை மெய்த்தொழில், மெய்ப்பிடித்தம், மெய்மேல்வரிக, மெய்யுறுதி, மெய்யாக்கம், மெய்யழகு முதலியன.

மெய்த்தொழில் என்பது உடற்பயிற்சி என்னும் பொருள் உடையது. மெய்ப்பிடித்தம் என்பதற்கு உடம்பைத் தேய்த்துப் பிடித்தல் என்ற பொருளுள்ளது. நோயாளியின் உடம்பில் மருந்து எண்ணெயைப் பூசித் தேய்த்துப் பிடித்துவிடுவதற்கு இச்சொல் வழங்குகிறது.

  • தமிழ்ப்பொழில் : 36:7, 1960.