பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

திருவள்ளுவரும், தாம் அருளிய திருக்குறளிலே முனிவர் என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்குகிறார். (முனிவர் அல்லது துறவிகள் என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்குகிற திருவள்ளுவர்,கடவுள் என்னும் சொல்லை ஓரிடத்திலும் ஆளவில்லை.) தெய்வம் அ என்னும் சொல்லை வெவ்வேறு பொருளில் வழங்குகிறார் திருவள்ளுவர். அவற்றில் இரண்டிடங்களில் மட்டும் முனிவர், துறவிகள் என்னும் பொருளில் வழங்குகிறார். அவற்றைக் காட்டுவாம் :

“தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இத்திருக்குறளில், தெய்வம் என்னும் சொல்லுக்கு முனிவர் (கடவுள்) என்று பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பரிமேலழகரும் மணக்குடவரும் இச்சொல்லுக்குத் 'தேவர்' என்று பொருள் கொண்டார்கள். இஃது எவ்வாறு பொருந்தும்? தெய்வம் என்பதற்குத் தேவர் என்று பொருள் கொண்டால், தேவர்களை இல்லறத்தான் போற்றுவது எப்படி? தேவர் அமிர்தம் உண்பவர், மானிடர் தேவர்களுக்கு அமிர்த உணவு கொடுக்க முடியுமா? மனிதர் உண்ணும் உணவைத் தேவர் உண்பாரா? அறிவுக்குப் பொருந்தவில்லையே!

ஆ கவே, தெய்வம் என்பதற்கு முனிவர், துறவிகள் என்று பொருள் கொண்டால், துறவிகளை இல்லறத்தார் உணவு கொடுத்துக் காப்பாற்றவேண்டிய கடமைக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆகவே, இக்குறளில் தெய்வம் என்பதற்கு, (உலகத்திலே உணவு உண்டு வாழ்கிற) முனிவர்கள் என்று பொருள் கொள்வது சாலச் சிறப்புள்ளது; பண்டையோர் வழக்குக்கு முரண்பட்டதும் அன்று. இல்லறத்தான் தன்னையும், தன் சுற்றத்தாரையும், விருந்தினரையும், துறவிகளையும் (இவர்கள் எல்லோரும் உணவு உண்டு உயிர்வாழவேண்டியவர்கள்) காப்பாற்ற வேண்டும் என்பது இக்குறளின் கருத்து.

னால், தென்புலத்தார் என்பவரையும் கூறுகிறாரே! தென் புலத்தார் என்றால் பிதிரர் என்று பொருள் கூறுகின்றனரே! பிதிரர் மனிதர் உண்ணும் சோறு உண்டு வாழ்பவரா என்கிற கேள்வி எழுகிறது. இது நியாயமான கேள்வியே. இக்கேள்விக்கு நான் கூறும் விடை என்னவென்றால், தென்புலத்தார் என்பதற்கு வேறு ஏதோ பொருள் இருக்கவேண்டும். அப்பொருள், உலகத்தில் உணவு கொண்டு வாழ்கிற மனிதரில் ஒரு வகையாரைக் குறிக்கவேண்டும். அவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து உண்மை காண