பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

யாகிய கண்ணகியின் மனோநிலை எவ்வாறிருந்திருக்கும் என்பதை வாசகர் சிந்தித்து உணரவேண்டும். பன்னிரண்டு ஆண்டு மழை யில்லாமல் வற்கடத்தால் வறண்டிருந்த நிலத்தில் திடீரென்று பெருமழை பெய்து பெருவெள்ளம் புரண்டோடியது போலவும், பெருஞ் செல்வத்தைப் பெற்றிருந்த ஒருவன் விதிவசத்தால் அதனை இழந்து, வறுமையால் வாடித் தவித்துத் துன்புற்றிருக்கும் நிலையில், மீண்டும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெற்றது போலவும் கண்ணகியார் கோவலனுடைய காதலை மீண்டும் பெற்றதனால், இன்ப வாழ்க்கையை மீண்டும் கைவரப்பெற்றது கண்டு பெருமகிழ்ச்சி யடைகிறார்.

கோவலன் சிலம்பை விற்று வருவதாகச் சொல்லிக் கண்ணகியாரிடம் விடைபெற்றுச் செல்கிறான். கண்ணகியார் இன்பக்கனவு கண்டு கொண்டிருக்கிறார். நேரம் கழிகிறது. மாலைப் பொழுதும் வந்தது; கோவலன் வரவில்லை. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது; கோவலன் இன்னும் திரும்பி வரவில்லை. கண்ணகியாருக்குக் கவலை தோன்று கிறது. ஏதேதோ நினைக்கின்றார். இரவுநேரம் தன் காதில் படும்படியாகச் சிலமகளிர் ஏதோ பேசிக் கொள்வதைக் கண்ணகியார் கவனிக்கிறார். சஞ்சலத்தோடு அவர்களை அழைத்து விசாரிக்கிறார். அந்தோ! கோவலன் கொல்லப்பட்டான் என்னும் செய்தியைக் கேட்டு இடி விழுந்த மரம்போலானார் கண்ணகியார். அவர் கண்டிருந்த இன்பக் கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்தன. மற்றக் கதைகள் எல்லாம் வாசகர் அறிந்ததுதானே.

பன்னிரண்டு ஆண்டுகளாகக் கோவலனை இழந்திருந்த கண்ணகியார், கோவலனை மீண்டும் பெற்றபோது, தமது இருள் சூழ்ந்த வாழ்க்கையில் ஒரு பேரொளி உதயமாவதைக் கண்டு பேருவகையும் நம்பிக்கையும் கொண்டார். ஆனால் அந்தோ! அப்பேரொளி உதயம் ஆவதற்கு முன்பே அவ்வொளியைக் கார்மேகம் கவிந்துகொண்டது. பெரும் பசியினால் வருந்தியலைந்த ஒருவனுக்கு, கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போன்ற நல்லுணவு கிடைக்கப்பெற்று, அவன் அதனை ஆவலோடு உண்பதற்கு வாயில் இடும்போது அதனைத் தட்டிப் பறித்துவிட்டதுபோல, பன்னிரண்டு யாண்டு பிரிந்திருந்த கணவனை மறுபடியும் பெற்று, அந்தோ! மீண்டும் இழந்தார். மீண்டும் என்றென் றைக்கும் கிடைக்காதபடி இழந்தார். இந்நிலையில் அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அவர் வாழ்க்கை அதோடு முடிந்தது.