பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானை உரித்த பெருமான்*

(சிவபெருமான் யானையை உரித்துப் போர்த்த செய்தி வழங்கப்படுவதன் அடிப்படைக் காரணத்தை எடுத்துணர்த்துகின்றார் ஆசிரியர்)

“பூமன் சிரங்கண்டி; அந்தகன் கோவல்; புரம் அதிகை; மாமன் பறியல்; சலந்தரன் விற்குடி; மாப்பழுவூர்;

காமன் கொறுக்கை; யமன்கட வூர்; இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே

என்பது சிவபெருமானுடைய அட்ட வீரட்டங்களைக் கூறும் செய்யுள். இதில், சிவபெருமான் செய்த எட்டு வீரச் செயல்கள் கூறப்படுகின்றன. திருக்கண்டியூரில் பிரமனுடைய சிரத்தைக் கொய்தார்; திருக்கோவ லூரில் அந்தகாசுரனை எரித்தார்; திருவதிகையில் திரிபுரத்தை எரித்தார்; திருப்பறியலூரில் தக்கன் தலையை அறுத்தார்; திருவிற்குடியில் சலந்தரனைக் கொன்றார்; திருப்பழுவூரில் யானையை உரித்தார்; திருக்கொறுக்கையில் மன்மதனை எரித்தார் என்று அவரது எட்டு வீரச் செயல்கள் கூறப்படுகின்றன.

இங்கு யானையை உரித்த செய்தியை ஆராய்வோம். யானையை உரித்த செய்தி, ஏனைய செய்திகளைப் போலவே இரண்டு விதமாக ஆராயப்படும். அவை, புராணக் கதை ஒன்று; சாத்திரக் கருத்து மற்றொன்று. சாத்திரக் கருத்தை மட்டும் ஆராய்வோம். சாத்திரக் கருத்தை வெளிப்படையாகக் கூறுவது நமது நாட்டு மரபன்று. ஆகவே ஆராய்ந்து அறிவோம்.

யானை யுரித்த செய்தியை திருநாவுக்கரசர் பல இடங்களில் கூறியுள்ளார். அவற்றுள் நமது ஆராய்ச்சிக்கு வேண்டியவை இவை:- 'ஆர்த்தார் உயிர் அடும் அந்தகன் தன்உடல்

66

பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக் கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீரூரி

போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே'

  • செந்தமிழ்ச்செல்வி, 22:9, 1948.